இலங்கையிலிருந்து தாய்லாந்து சென்று திரும்பிய போது 110 கோடி ரூபா போதைப் பொருளுடன் 22 பிக்குகள் கைது; 110 கிலோ ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ விமான நிலையத்தில் சிக்கின

110 கோடி ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்களை தாய்லாந்திலிருந்து கடத்தி வந்து 22 இலங்கை பௌத்த பிக்குகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில்லேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப் பொருட்களானது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்டவற்றிலேயே மிகப்பெரிய தொகை என்பதுடன் போதைப்பொருளுடன் பௌத்த பிக்குகள் குழு ஒன்று கைது செய்யப்பட்டதும் இதுவே முதல் முறையாகும்.
ஒரு அனுசரணையாளர் வழங்கிய விமான டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி இந்தக் குழுவினர் கடந்த 22 ஆம் திகதி இலங்கையிலிருந்து தாய்லாந்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சாதாரணமானவர்களைப் போல் வேடமிட்டு பல்வேறு உல்லாச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை அவர்களது கையடக்க தொலைபேசிகளை பரிசோதித்து போது அதில் பதிவு செய்யப்பட்டிருந்த புகைப்படங்கள், காணொளிகள் மூலம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப்பிக்குகள் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து தாய் எயார் ஏசியா விமான சேவையின் எம் டீ -140 இலக்க விமான மூலம் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு 10.10 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த பிக்குகள் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வசித்துவருவதுடன் பலதரப்பட்ட நிறுவனங்களில் உயர்கல்வியைத் தொடரும் இளம் பிக்குகள் எனவும் தெரியவந்துள்ளது .
அவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளை பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையிட்ட போது பாடசாலை உபகரணங்கள் மற்றும் பலவிதமான இனிப்புப் பண்டங்களுடன் வைத்து பயணப் பொதிகளின் கீழ் பகுதிகளில் ‘குஷ்’ மற்றும் ‘ஹாஷ்’ போதைப்பொருட்கள் சூசகமாக மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது .
அவற்றில் 110 கிலோவுக்கும் அதிகமான ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்களை இருந்துள்ளன. ஒவ்வொரு பிக்குவின் பயணப் பைகளிலும் 5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த போதைப்பொருட்கள்,மறைத்து வைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இவ்விவகாரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கைது செய்யப்பட்டபிக்குகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர், விமான நிலையத்தில் போதைப் பொருளுடன் கைதாகிய 22 பிக்குகளும் தாய்லாந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தாக கூறப்படும் பிரதான சந்தேக நபரான பிக்கு ஒருவரையும் கைது செய்துள்ளனர். கம்கஹா மீகவத்த பகுதியில் நேற்று முற்பகல் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()