கைது செய்யப்பட்டவர்கள் உண்மையில் பிக்குகளா?; பலாங்கொட கஸ்ஸப தேரர் கேள்வி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையில் பிக்குகளா? என்றும், அவர்கள் ஏதேனும் கட்சியினால் வழிநடத்தப்பட்டவர்களா? என்றும் சந்தேகங்கள் இருப்பதாக பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் சிங்கள, பௌத்த எதிர்ப்பு அரசாங்கமாகும். இவ்வாறான நிலைமையிலேயே குறித்த சம்பவம் நடக்கின்றது. இதனால் சந்தேகங்கள் எழுவது சாதாரணமாகும். தாய்லாந்தில் இருந்து வந்த இலங்கை பிக்குகள் என்று கூறப்படுகின்றவர்கள் 22 பேரால் போதைப் பொருள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவே கூறப்படுகின்றது.
குறிப்பாக தாய்லாந்தில் குஷ் என்ற போதைப் பொருள் தடை செய்யப்பட்டது அல்ல. அதனை கொண்டு வர முடியும். இலங்கையில் அதற்கு தடையுள்ளது. தாய்லாந்து என்பது போதைப் பொருள் வர்த்தகர்களின் தவரணை போன்றது. சிலவேளை குறித்த பிக்குகள் என்று கூறப்படுவோர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்த தேவையென்பதால் இரகசியமான முறையில் காவி உடைகளை அணிவித்து, மொட்டையடித்திருக்கவும் முடியும். இல்லையென்றால் அவர்கள் சாசனத்திற்குள் உள்வாங்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். அப்படியும் இல்லையென்றால் உயர் கல்விகளை தொடர்பவர்களாக இருக்கலாம். இந்த விடயம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தலைவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
சிறுவர்கள் பிக்குகளாகி மாணவர்களாக பல்கலைக்கழகங்களுக்கு சென்ற பின்னர் முன்னிலை சோஷலிசக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் சங்கங்களுக்குள் உள்வாங்கப்பட்டு, மார்க்ஸ்வாத சிந்தனைக்கு உட்படுத்தி அவர்களின் பிக்கு சிந்தனைகளை மாற்றிவிடுகின்றனர். இதன்பின்னர் இவர்கள் போதைப் பொருள் போன்ற பழக்கங்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் இந்த சம்பவமானது ஏதாவது கட்சியின் வழிகாட்டல்களில் நடந்ததாக இருக்கலாம்.
அத்துடன் உண்மையில் இவர்கள் பிக்குகளா? அப்படி உண்மையான பிக்குகள் என்றால் இவர்கள் எப்படி இந்த நிலைமைக்குள் தள்ளப்பட்டனர். இவர்கள் உண்மையில் பிக்குகள் அல்லவென்றால் இதனை செய்தவர்கள் யார்? என்று விசாரிக்க வேண்டும். பௌத்தத்திற்கு எதிராக இந்த அரசாங்கம் செய்யும் வேலைகளை பார்க்கும் போது இந்த அரசாங்கத்தினால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
![]()