இலங்கை

அர்ச்சுனா எம்.பி துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் ; தாயும் குழந்தையும் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணி சர்ச்சையையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த காணி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாக பிணக்கு நிலவி வந்த நிலையில்,   சனிக்கிழமை அந்த காணிக்குள் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து, தனது காணிக்குள் அத்துமீறி நுழைந்து தன்னை அச்சுறுத்தியதாக அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவரை கைது செய்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

விசாரணைக்கு பின், குறித்த பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், குறித்த பெண் ஒரு வயது குழந்தைக்கு தாயாக இருப்பதுடன், குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு, குழந்தையை தாயுடன் வைத்திருக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *