செம்மணிப் புதைகுழி அகழ்வு மீண்டும் இன்று

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் நீதிமன்ற தீர்மானத்துக்கமைய இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பிலான வழக்கு கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதே குறித்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.
நீதி அமைச்சினால் அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டமை குறித்து வழக்கில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகள் , முதல் கட்டமாக 09 நாட்களும் , இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றில் 239 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ,நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை, மழை நீர் தேங்கி நின்றமை போன்ற பல காரணங்களால் அகழ்வு பணிகள் பிற்போடப்பட்டு வந்த நிலையில் தற்போது அகழ்வு பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 08 வாரங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()