இலங்கை

25 லட்சம் டொலர் மோசடி; நிதி அமைச்சின் செயலாளர் ஹேக்கராக இருக்கலாம்

திறைசேரியின் 2.5 மில்லியன்(25 லட்சம் )டொலர் மோசடியுடன் தொடர்புடைய ஹேக்கராக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இருக்கலாம் என்றும், அவரே அவுஸ்திரேலியாவுடன் தனிப்பட்ட தொடர்புகளை கொண்டவராக இருக்கின்றார் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி அலுவலகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே வீரவன்ச இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அவுஸ்திரேலியாவில் இருந்து கடன் உரிமையாளர் போன்று ஒருவர் தனது கணக்கு இலக்கத்தை குறிப்பிட்டு அனுப்பிய மின்னஞ்சலில் உள்ள தகவல்களுக்கமைய இங்கிருந்த அதிகாரிகள் அந்த கணக்கு இலக்கத்திற்கு பணத்தை அனுப்பியுள்ளனர். இது சாதாரணமாக செய்யக்கூடிய விடயமா? இப்படி சிறுபிள்ளை போன்று கூற முடியுமா? மின்னஞ்சல் வரும் போது அதில் உள்ள இலக்கத்திற்கு பணம் அனுப்பும் முறைமை உள்ளதா? இது என்ன பெட்டிக்கடையா? இப்படி 2.5 மில்லியன் டொலரை வேறு கணக்கிற்கு அனுப்புவதென்றால் நிதி அமைச்சு எதற்கு இருக்கின்றது. 76 வருட வரலாற்றில் இப்படி நடந்துள்ளதா?

ஹெக்கர்கள் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காகவே இது தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்தாமல் இருந்ததாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன கூறுகின்றார். ஹெக்கர்கள் என்பவர்கள் பற்றைக்குள் மறைந்துகொண்டிருப்பவர்கள் என்று நினைத்து அவ்வாறு கூறுகின்றாறோ தெரியவில்லை. இப்படி பதில் கூறுவதே நாட்டுக்கு வெட்கமாகும்.

ஹர்ஷன என்பவர் தேசிய மக்கள் சக்தியின் எம்.பியாக இருந்தவராவார். இவர் எம்.பி பதவியில் இருந்து நீங்கி, நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் அவுஸ்திரெலியாவில் உயர்கல்வியை கற்றவர். அவுஸ்திரெலியாவுடன் தனிப்பட்ட தொடர்புகள் பலற்றை முன்னெடுத்துச் செல்பவர் என்பதுடன் அவர் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கையின் இரட்டைக் குடியுரிமையை கொண்டவராகவும் அறியக்கிடைத்துள்ளது. இது தெளிவாக திருட்டே. நிதி அமைச்சின் செயலாளரே இதன் ஹெக்கராவார் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *