ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தாக்குதல் சூத்திரதாரிக்கு அஞ்சுகிறாரா ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தும், அவர்களைக் கைது செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் மௌனம் காப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் மனித உரிமை ஆர்வலருமான செல்வகுமார் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான செயற்பாடுகளை அரசு விரைவாக முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தீபச்சுடர் ஏற்றப்பட்டதுடன் வீதியின் இரு மருங்கிலும் ஒளியேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய செல்வகுமார்,
இந்த கோரத் தாக்குதலில் 225 இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 269 பேர் உயிரிழந்ததுடன், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தான் ஆட்சிக்கு வந்த 6 மாதங்களுக்குள் நீதியை நிலைநாட்டுவேன் என்ற அவரது வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே ஆகியோர் கைது செய்யப்பட்டதையும், அவர்களிடமிருந்து சாட்சியங்கள் திரட்டப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார். அண்மையில் பாராளுமன்றத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையில், தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதை அவர் வன்மையாகக் கண்டித்தார். அந்த அறிக்கைகளை மறைத்த அதிகாரிகள் யார் மற்றும் அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.
தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பது அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தும், அவர்களைக் கைது செய்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே அரசாங்கம் மௌனம் காப்பதாக அவர் சாடினார்.
அரசாங்கம் உண்மையாகவே மக்களின் நலனில் அக்கறை கொண்டதாக இருந்தால், உடனடியாக குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
![]()