இலங்கை

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன் கேள்வி!

இரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை, நீலகாமம் தோட்டத்தில் தோட்ட நிர்வாகத்தின் ‘ஹெல்மட் குண்டர்கள்’ அராஜகத்தில் ஈடுபட்டு, வீடற்ற தமிழ் பிரஜை ஒருவர் கட்டிய வீட்டை உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவம் மலையக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“சட்டவிரோதமாக” வீடு கட்டினார் என்ற குற்றச்சாட்டில் நிசாந்தகுமார் என்பவர் காவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த கணேசன் விஜயகாந்த் என்பவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் காவத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமரத்னவைத் தொடர்பு கொண்டு கடுமையாக எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

“கோட்டாபய ஆட்சிக் காலத்தில் இவ்வாறான அராஜகங்களை நான் நேரில் சென்று தடுத்துள்ளேன்.

இப்போது அனுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சியிலும் அதே ஹெல்மட் குண்டர்கள் இனவாத அராஜகத்தில் ஈடுபடுகிறார்களா?

வீட்டுப் பிரச்சினை குறித்து நாம் அரசாங்கத்துடன் பேசிக்கொள்வோம். ஆனால், தாக்குதல் நடத்திய குண்டர்களை முதலில் கைது செய்யுங்கள் என பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.”

மனோ கணேசனின் தலையீட்டைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டிருந்த நிசாந்தகுமார் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசாங்கத்திலுள்ள மலையக அமைச்சர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ள மனோ கணேசன், பின்வரும் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

தோட்டங்களில் உள்ள தரிசு காணிகளில் வீடற்றவர்கள் தற்காலிக குடியிருப்புகளை அமைக்க உரிமை வழங்கப்பட வேண்டும்.

இந்த உரிமை தற்போது பெரும்பான்மை இனத்தவருக்கு மட்டுமே வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும்.

இராணுவத்தில் இருந்து விலகி வந்தவர்களைக் கொண்டு தோட்ட நிர்வாகங்கள் ‘குண்டர் படைகளை’ உருவாக்கி தொழிலாளர்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமை என்பது அடிப்படை உரிமை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதற்கு நீதி கிடைக்கத் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *