இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அரசாங்கம் தவறிவிட்டது ; எரிபொருள் கொள்வனவில் பாரிய ஊழல்  

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்று  (21) ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஈஸ்டர் தாக்குதல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு கருவியாக மாத்திரமே பயன்படுத்தப்பட்டதே தவிர, உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, தேர்தலுக்கு முன்னர் கடுவாபிட்டிய தேவாலயத்திற்குச் சென்று இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்த போதிலும், ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

அரசாங்கத்திடம் போதிய வளங்கள் இருந்தும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், ஈஸ்டர் தாக்குதலை அரசியல் மேடைப் பொருளாக மாற்றாமல் பாதிக்கபபட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும்.

அத்தோடு, எதிர்வரும் மே தினக் கூட்டத்தை மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் நடத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த அவர், இம்முறை பேரணிகள் எவையும் நடத்தப்படமாட்டாது .

கடந்த தேர்தலில் தற்போதைய அரசாங்கத்திற்கு 80 சதவீதத்திற்கும் அதிகமான உழைக்கும் மக்கள் வாக்களித்த போதிலும், அவர்களின் சம்பள உயர்வு, பதவியுயர்வு மற்றும் வாழ்வாதார உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது.

உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும் ஐக்கிய மக்கள் சக்தி ஒரு பலமான போராட்டத்தை முன்னெடுக்கும்.

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க அரச அதிகாரிகளை பலிக்கடாவாக்குவதாகக் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதியின் பரிந்துரை இன்றி இவ்வாறான தீர்மானங்களை எடுக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்ப்பின் மூலம் அரசாங்கம் அரசியலமைப்பை மீறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஒட்டுமொத்த அரச சேவைக்கும் ஒரு கறையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய உப ஜனாதிபதியின் இலங்கை விஜயம் குறித்துப் பேசிய அவர், எரிபொருள் குழாய் கட்டமைப்பு மற்றும் மின்சார விநியோகக் கேபிள் இணைப்பு போன்ற திட்டங்களை முன்னெடுக்குமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.Geographic Reference

எதிர்க்கட்சியில் இருந்தபோது இவ்வாறான இந்தியத் திட்டங்களைக் கடுமையாக எதிர்த்த அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினர், இன்று அதே திட்டங்களை நடைமுறைப்படுத்த முனைவது அவர்களின் இரட்டை வேடத்தைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் எட்டப்பட்டுள்ள உடன்படிக்கைகள் குறித்து அரசாங்கம் நாட்டுக்கு உடனடியாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

இறுதியாக, நாட்டின் எரிபொருள் கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 212 டொலர்களாக இருக்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் 286 டொலர்கள் வீதம் நான்கு எரிபொருள் கப்பல்களைக் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஒரு பீப்பாய்க்கு சுமார் 70 டொலர்கள் மேலதிகமாகச் செலுத்தப்பட்டுள்ளமை ஊடாக பாரிய டொலர் கொள்ளை இடம்பெற்றுள்ளது. அத்துடன் பெட்ரோல் மற்றும் டீசல் மீது 46 முதல் 64 சதவீதம் வரை வரி அறவிடுவதன் மூலம் அரசாங்கம் மக்களை வாட்டி வதைப்பதாகவும், இந்த வரிகளைக் குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *