அமைச்சர் ஜயக்கொடியை காப்பாற்றி செயலாளர் மீது பழி சுமத்த முயற்சி; விமல் வீரவன்ச தெரிவிப்பு

நிலக்கரி மோசடியில் இருந்து வலுச் சக்தி அமைச்சராக இருந்த குமார ஜயக்கொடியை காப்பாற்றி, அமைச்சின் செயலாளர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முயற்சிக்கப்படுகின்றது என்றும், இந்த நோக்கத்திலேயே அவர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார் எனவும் தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நிலக்கரி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில் வலுச்சக்தி அமைச்சர் பதவி விலகியுள்ளார். அவருடன் அமைச்சின் செயலாளரும் பதவி விலகியுள்ளார். ஆனால் இந்த விடயத்தில் அமைச்சின் செயலாளர் மீது எவரும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. அவர் இந்த மோசடியில் தொடர்புபட்டுள்ளதாகவும் எவரும் கூறவில்லை. இவ்வாறான நிலைமையில் அமைச்சின் செயலாளர் ஏன் பதவி விலக வேண்டும். பால குமாரவை தப்பிக்கச் செய்ய நிலக்கரி குமார போட்ட முடிச்சிதான் இது.
கணக்காய்வு அறிக்கை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின அறிக்கைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தரமற்றது இல்லை என்று கூறிக்கொண்டிருந்தவர்களுக்கு இறுதியில் அது தரமற்றது என்று ஏற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது. அதேபோன்ற மோசடி நடக்கவில்லை என்று கூறியவர்கள் இப்போது ஆணைக்குழுவை நியமிக்கின்றன. இதற்காக பழிக்கடா ஒன்று அவசியமாகும். அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு ஒன்றை கூறுகின்றேன். உங்களால் ஐந்த சதத்திற்கேனும் நம்பிக்கை வைக்க முடியாத ஜனாதிபதியொருவரே இப்போது நாட்டை ஆள்கின்றார். அந்த ஜனாதிபதி, அமைச்சர்கள் மோசடியில் ஈடுபடும் போது, நீங்கள் அதனை பார்த்துக்கொண்டிருந்தால் இறுதியில் அமைச்சர்களை காப்பாற்ற உங்களையெ பலிக்கடாவாக்குவர். இப்போது பதவி விலகிய வலுச் சக்தி அமைச்சின் செயலளரின் நெற்றியில் பலிக்கடா என்று எழுதப்பட்டுள்ளது. திருட்டை செய்துவிட்டு அதனை தேடுவதாக கூறி வேறு ஒருவரை பலிக்கடாவாக்கி தப்பித்துக்கொள்வர்.
எவ்வாறாயினும் மற்றையவர்கள் மீது குற்றங்களை சுமத்திவிட்டு தப்பிக்க முடியாது. அடுத்து வரும் அரசாங்கத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்போது அனுரகுமாரவுக்கும் குமார ஜயக்கொடியும் சிறைக்கு செல்ல நேரிடும். சிறைக்கு செல்ல தயாராக இருக்கும் ஜனாதிபதி நிலக்கரி மோசடியில் எவ்வாறு தொடர்புபடுகின்றார் என்பதனை நிரூபிக்கும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நடக்கும் என்றார்.
![]()