முச்சந்தி

இந்த அமைச்சரவை சிறை செல்ல நேரிடும்; பொதுஜன பெரமுன எம்.பி.சானக்க

தற்போதைய அரசாங்கம் தவிர்ந்த இனி வரக்கூடிய வேறு எந்தவொரு அரசாங்கத்தினாலும் தற்போதைய அமைச்சரவை சிறை செல்ல நேரிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டீ.வி.சானக்க தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிலக்கரி இறக்குமதி மோசடி விடயத்தில் அமைச்சரையும், அமைச்சின் செயலாளரையும் பதவி விலகச் செய்து இந்தப் பிரச்சினையை கை கழுவ அரசாங்கம் நினைக்குமாக இருந்தால் அதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. 10,000 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை செலுத்துவது யார்? அதேபோன்று டீசல் பீப்பாய் ஒன்று 260 ரூபா என்ற ரீதியில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த எரிபொருளில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 7, 8 இலட்சம் லீட்டர் டீசல் மின்சார உற்பத்திக்கு செலவாகும் நிலையில், இந்த விலையில் கொண்டுவரப்படும் டீசலால் நாளொன்றுக்கு மின் உற்பத்திய்ன போது 4500 இலட்சம் ரூபா செலவாகும். இந்த பணத்தை செலுத்துபவர்கள் யார்?

எவ்வாறாயினும் இவை அமைச்சர் தனியாக செய்பவை அல்ல. ஜனாதிபதி, அமைச்சரவை தொடர்புபடுகின்றன. இதனால் இவற்றை ஒருவரின் மீது சுமத்தி தப்பித்துக்கொள்ள இடமளிக்க முடியாது. இதனால் எடுக்கக்கூடிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்காக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் இந்த அரசாங்கம் தவிர்ந்த வரக்கூடிய வேறு எந்தவொரு அரசாங்கத்தினாலும் இப்போதுள்ள அமைச்சரவைக்கு சிறை செல்ல நேரிடும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *