இலங்கை

தையிட்டி நிலத்திற்கு பேராசைப்படும் ஒற்றை மனிதன்; காணி உரிமையாளர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள்

யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை காணி அளவீட்டு பணிகள் இன்றையதினம் நடைபெறவிருந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதுடன், மே மாதம் அளவீட்டு பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தமையை அடுத்து அப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரியிருந்தனர்.

அதனடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர், விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை,  மூன்று பேருந்துக்களில் தென்னிலங்கையில் இருந்து, விகாரை வழிபாட்டிற்கு என பலர் வருகை தந்து விகாரையில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில்,  பலாலி பொலிஸார் விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை தமது காணிகளை அடையாளம் காட்ட என காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு வருகை தந்தனர்.

இருந்த போதிலும், காலை 09.30 மணி வரையில், காணி அளவீட்டு பணிகளுக்கு காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர், மாவட்ட செயலர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் , காணி உரிமையாளர்கள் மத்தியில் அச்ச நிலை உருவானது.

அதன்பின் மாவட்ட செயலர் ம. பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியதுடன் காணி அளவீடு இடைநிறுத்தப்பட்டதாகவும் அதற்கான விளக்கத்தையும் மக்களுக்கு அளித்துள்ளார்.

தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரரின் முறைப்பாட்டை அடுத்து காணி அளவீடு நிறுதப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து யாழ்.மாவட்ட செயலருடன் காணி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தையிட்டி நிலத்திற்கு பேராசைப்படுவது ஒற்றை மனிதனே. அவர் அதிகாரிகளையும் ஆட்டிப்படைத்து வருகிறார் என இதன்போது காணி உரிமையாளர்கள் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *