முச்சந்தி
எரிசக்தி அரசியலில் இஸ்ரேலின் புதிய வியூகம்!… ஹார்முஸ்க்கு பதிலாக நெதன்யாகு புது திட்டம்…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(ஹார்முஸ் நீரிணைக்கு முடிவு கட்ட நெதன்யாகு போடும் முக்கிய திட்டம் மூலம், வளைகுடா எண்ணெய் அரசியலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டதாக அமையும். மத்திய கிழக்கு எரிசக்தி அரசியலில் இஸ்ரேலின் புதிய வியூகம் தற்போது தெரிய வந்துள்ளது)உலகளாவிய கச்சாய் எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. ஒரு பீப்பா 120 டொலரை தாண்டும் நிலையில் உள்ளது. உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து எச்சரிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
நெதன்யாகுவின் புதிய எரிசக்திப் பாதை
மத்திய கிழக்கு எரிசக்தி அரசியலில் இஸ்ரேலின் புதிய வியூகம் தற்போது தெரிய வந்துள்ளது. ஹார்முஸ் நீரிணைக்கு முடிவு கட்ட நெதன்யாகு போடும் முக்கிய திட்டம் மூலம், வளைகுடா எண்ணெய் அரசியலை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டதாக அமையும்.

கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து சவுதி அரேபியா, ஈராக், ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் வழியாக மத்திய தரைக்கடலுக்கு எண்ணெயை அனுப்பும் வளைகுடா எண்ணெய் மாற்றுப்பாதைக் குழாய்த் திட்டத்தை நெதன்யாகு அரசு அறிவித்துள்ளது.
இதன் மிகப்பெரிய முக்கியம்துவம் என்னவென்றால் ஹார்முஸ் நீரிணை, சூயஸ் கால்வாய் மற்றும் பாப் எல்-மண்டேப் வழித்தடம் ஆகியவற்றைத் தவிர்த்து, உலகளாவிய எரிசக்தி வழித்தடங்களை தன்வசப்படுத்த இஸ்ரேல் பெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மூலோபாய ரீதியாக சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
குறிப்பாக இப்பகுதி முழுவதும் உள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகள் முன்னெப்போதையும் விட அதிக பாதிப்புக்குள்ளாகும் இக்காலகட்டத்தில் இஸ்ரேலின் இந்த முயற்சி அரபு நாடுகளில் முக்கிய விடயமாக மாறியுள்ளது. பிராந்திய போர், கடல் முற்றுகைகள் அல்லது பிராந்திய பதற்றம் ஆகியவற்றால் பாதிக்கப்படக்கூடிய குறுகிய கடல்வழிப் பாதைகளைச் சார்ந்திருக்காமல், வளைகுடா உற்பத்தியாளர்களுக்கு இது ஒரு நேரடி மேற்கு நோக்கிய வழியை வழங்கக்கூடும் என இஸ்ரேல் கருதுகிறது.

ஆனால், இதன் புவியியல் அம்சங்களைப் போலவே அரசியலும் மிகப் பெரியது. இது போன்ற ஒரு வழித்தடம், ஒன்றுக்கொன்று முரண்படும் நலன்கள், பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் தீர்க்கப்படாத பிராந்திய பதட்டங்களைக் கொண்ட பல நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கும். மேலும், இஸ்ரேல் அரசியல் ரீதியாக மிகவும் சிக்கலானதாக மாறினால், அதற்குப் பதிலாக ஜோர்டான் மற்றும் சிரியா வழியாக ஒரு மேற்கு நோக்கிய பாதையே பொருத்தம் என்றும் கூறப்படுகிறது.
எனவே, இந்த இஸ்ரேல் யோசனை வரைபடத்தில் சக்திவாய்ந்ததாகத் தோன்றினாலும், அதை நிஜமாக்குவது மிகவும் சிக்கலானதாக இருக்கும். இந்த வழித்தடம் புவியியல் ரீதியாகப் பொருத்தமானதா என்பதல்ல கேள்வி; அரசியல் அதை எப்போதாவது அனுமதிக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
வளைகுடா எரிசக்திப் போர்:
வளைகுடாவில் முழுமையான எரிசக்திப் போராக மாறிய ஈரான் நெருக்கடி தற்போது சிறிது தளர்ந்துள்ளது. ஈரானின் ‘சவுத் பார்ஸ்’ (South Pars) இயற்கை எரிவாயு வயல் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் போரானது உத்தியோகபூர்வமாக ஒரு எரிசக்தி உட்கட்டமைப்புப் போராக உருவெடுத்தது. இராணுவ இலக்குகளைத் தாண்டி, பொருளாதார முதுகெலும்புகளைக் குறிவைக்கும் புதிய வியூகத்தை இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது.
உலகின் சுமார் இருபது சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு ஹார்முஸ் நீரிணை பாதை வழியாகச் செல்லும் நிலையில், அதன் முடக்கம் உலக பொருளாதாரத்திற்கு நேரடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள அதிரடியான “எரிசக்திப் பாதை” திட்டம் சர்வதேச அரசியலில் ஒரு புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக இந்தத் திட்டத்தை நெதன்யாகு முன்மொழிந்துள்ளார்.

ஈரானின் எரிவாயு உற்பத்தியில் பாரிய முடக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், கட்டாரின் ‘ராஸ் லஃபான்’ (Ras Laffan) உள்ளிட்ட பாரசீக வளைகுடா நாடுகளின் எரிசக்தித் தளங்கள் மீது ஈரான் தனது பதிலடித் தாக்குதல்களை விரிவுபடுத்தியது. இது சர்வதேச எரிசக்திச் சந்தையில் பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஈரானின் திட்டமிட்ட வியூகமாகக் கருதப்படுகிறது. தற்போதைய களநிலவரத்தின்படி, ஈரான் இனிமேலும் “விகிதாசார” பதிலடிகளை வழங்காமல், எதிரிகளின் தாக்குதல் எல்லையைத் தாண்டிய பாரிய தாக்குதல்களை முன்னெடுக்கும் புதிய வியூகத்திற்கு மாறியுள்ளது.
இஸ்ரேலின் இந்த திட்டம் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையைச் சார்ந்திருப்பதை நிரந்தரமாகத் தவிர்க்க வேண்டும் என்பதே இதன் முதல் இலக்கு. சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை, அரேபிய தீபகற்பத்தின் வழியாக தரைவழியாகக் கொண்டு வந்து, இஸ்ரேலின் மத்திய தரைக்கடல் துறைமுகங்கள் வழியாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது. இந்தக் குழாய்கள் அமைக்கப்பட்டால், உலக நாடுகளை அச்சுறுத்தும் கடல் வழித்தடத் தடைகளை என்றென்றும் ஒழித்துவிடலாம் என்று நெதன்யாகு சமீபத்திய உரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் முட்டுக்கட்டை தொடருமா?
ஈரான் அமெரிக்கா மோதலின் மிக தீவிரமான மற்றும் உடனடி தாக்கம் உலகளாவிய எரிசக்தி துறையில் வெளிப்பட்டுள்ளது. உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக நரம்பு எனக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை, செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, உலகளாவிய பணவீக்கம் கட்டுக்கடங்காத அளவிற்கு உயர்ந்து, ஐரோப்பாவில் எரிபொருள் விலை செலவுகள் அதிகரித்துள்ளன. ஆசிய நாடுகளில் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வளர்ந்து வரும் நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

நெதன்யாகுவின் இந்தத் திட்டம் நிறைவேறினால், இஸ்ரேல் ஒரு வெறும் நாடாக மட்டும் இருக்காது. உலக எரிசக்தி விநியோகத்தின் ஒரு மிகமுக்கியமான “மையமாக” மாறும். தற்போது உலக எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் நீரிணை வழியாகவே செல்கிறது. ஈரான் இந்தப் பாதையை அடிக்கடி முடக்குவதால் ஏற்படும் விலை ஏற்றத்தை இத்திட்டம் தடுக்கும் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியா இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் ஒரு பொருளாதாரப் பாலமாக அமையும். சவுதி அரேபியா ஏற்கனவே தனது சொந்த கிழக்கு-மேற்கு குழாய் பாதையை மீண்டும் செயல்படுத்தி வருகிறது. இருப்பினும், இஸ்ரேல் வழியாக ஒரு புதிய பாதையை அமைப்பது என்பது மிகப்பெரிய ராஜதந்திர முடிவாகும்.
ஆனாலும் இவ்வளவு நீண்ட தூரக் குழாய் பாதைகளை ஈரானிய ஆதரவு குழுக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கும். சவுதி அரேபியா தற்போது எவ்விதமான நேரடி அரசியல் அறிக்கைகளையும் வெளியிடாமல், தனது பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
சவுதி அரேபியா தற்போது தனது சொந்த ‘யான்பு’ வழித்தடத்தையே (East-West Pipeline) தனது பிரதான பாதுகாப்புக் கவசமாகக் கருதுகிறது. நெதன்யாகுவின் திட்டத்தைச் சவுதி அரசு கவனமாகப் பரிசீலித்தாலும், போருக்குப் பிந்தைய நிலையான அரசியல் சூழல் ஏற்பட்டால் மட்டுமே இது குறித்து அதிகாரப்பூர்வமான ‘ஆம்’ என்ற பதில் கிடைக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையின் பின்னணி வெறும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தாண்டி, ஒரு விரிவான புவிசார் அரசியல் வியூகத்தின் பகுதியாகவே பார்க்கப்படுகிறது. டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், இந்த தாக்குதலின் மூலம் சீனாவின் எரிசக்தி ஆதாரங்களை கட்டுப்படுத்தவும், மத்திய கிழக்கில் புதிய அரசியல் ஒழுங்கை உருவாக்கவும், மேலும் இஸ்ரேலின் பிராந்திய ஆதிக்கத்தை உறுதி செய்யவும் முயன்றதாக மதிப்பிடப்படுகிறது.

ஆனால், இந்த வியூக இலக்குகள் பல முக்கிய தவறான கணிப்புகளின் அடிப்படையில் அமைந்திருந்தன. குறிப்பாக, ஈரானின் புவியியல் அமைப்பு மலைப்பகுதிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு கட்டமைப்புகள் ஒரு நேரடி தரைபடையெடுப்பை மிகவும் கடினமாக்குகின்றன. மேலும், ஈரான் தனது உள்நாட்டு இராணுவ திறன்களைப் பயன்படுத்தி நீண்டகால மோதலை தாங்கக்கூடிய நிலையிலும் உள்ளது.
உலகப் பொருளாதார நெருக்கடி:
ஹார்முஸ் நீரிணையை தற்போது அமெரிக்க மூட முடிவு செய்துள்ளதால் உலகப் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாகத் திறக்காவிடில் நீண்டகால உலகளாவிய நெருக்கடி உருவாகும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேவேளை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கத் தவறினால், ஐரோப்பா மிக மோசமான எரிசக்தி விநியோக நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தோடு, நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தமது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணுசக்தி தொழில்நுட்பத்தில் மீண்டும் முதலீடு செய்வது குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பிரச்சினைக்கு உள்ள ஒரே நடைமுறைச் சாத்தியமான தீர்வு, ஈரானின் அனுமதியுடன் இந்த நீரிணையை மீண்டும் திறப்பது மட்டுமே சாத்தியம் ஆகும்.
அத்தோடு, செங்கடலில் ஹூவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வர்த்தகக் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது எவ்வளவு கடினம் என்பது ஏற்கனவே நிரூபணமாகியுள்ளது. செங்கடல் பகுதியிலும் ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் வேகமான தாக்குதல் படகுகள் மூலம் எழும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பெருமளவிலான கப்பல்களைப் பாதுகாப்பது சாத்தியமற்றது என தெரிவிக்கப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை இன்று திறக்கப்பட்டாலும் கூட, ஏற்கனவே அங்கு உருவாகியுள்ள பாரிய கப்பல் போக்குவரத்து நெரிசல் காரணமாக, விநியோகச் சங்கிலி இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
![]()