இலங்கை

தையிட்டிக் காணிகளை விடுவிப்பு அரசு நோக்கம் அல்ல..!; திட்டங்களை தெட்ட தெளிவாக கூறிய கஜேந்திரன்

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. இதனால் வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலயரங்கில் இடம்பெற்ற ‘தையிட்டி: அடுத்து என்ன?’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டி விகாரையின் பெயர் பலகையில் சிறீலங்கா இராணுவத்தினரால் கட்டப்பட்டு அவர்களால் பராமரிக்கப்படுகின்ற விகாரையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விகாரை பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமானதா என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது. விகாரை அமைந்திருக்கும் காணி உரிமையாளர்கள் அந்த விகாரையின் வாசலுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. தென்பகுதியில் குழப்பங்கள் ஏற்படும் எனக் கூறிக்கொண்டு தையிட்டி விகாரைக்கு பலத்த பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுகின்றது.

இதன் அர்த்தம் அந்த விகாரையில் இருக்கக்கூடிய ஒரு துண்டு நிலத்தை கூட விடுவிக்க முடியாது என்பதே ஆகும். தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது.

அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தையிட்டி விகாரைப் பிரச்சினை தொடர்பாகவும் எங்களோடு கலந்துரையாடி இருந்தார்.

அந்த விகாரைப் பிரச்சினை தொடர்பாக தாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறார்கள் எனவும் எங்களிடம் தெரிவித்திருந்தார். தையிட்டி விவாகாரம் தொடர்பில் உலக நாடுகளால் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் நாள்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளது.

அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டிப் பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது.

வேறு இடங்களில் காணிகளை சுவீகரிக்கின்ற போது எழுத்து மூலமான அறிவிப்பின் மூலமே காணிகளை சுவீகரிக்கிறார்கள். ஆனால் தையிட்டி விகாரைப் பிரச்சினையில் நடப்பதோ வேறு விதமாக உள்ளது.

நில அளவைகள் திணைக்களம் எந்தக் கட்டளையின் அடிப்படையில் இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கு தயாராகின்றது? எழுத்து மூலமாகக் கட்டளைகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கின்றதா? அவ்வாறாயின் என்ன தேவைக்காக குறித்த காணிகள் அளவிடப்படுகின்றன என பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *