முச்சந்தி

ஹார்முஷ் நீரிணையை மூடும் அமெரிக்கா…. உலக கச்சாய் எண்ணெய் விலை உயர்வு!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(உலகின் இருபது வீத கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு ஆதாரமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை அமெரிக்க முடக்குவது, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது)
ஹார்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டை கையில் எடுக்கும் ட்ரம்ப் போட்ட உத்தரவால் உலக நாடுகள் பல அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளன. இதனால் உலக பொருளாதாரம் கடுமையான சிக்கலை மீண்டும் சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கும் நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களையும் தடுக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.
இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே இந்த பாதையில் செல்லும் கப்பல்களை முன்னர் ஈரான் குறி வைத்து தாக்கி வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல் போக்குவரத்தையும் முடக்குவதாக (Blockade) அறிவித்துள்ளமைக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்பாக ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைத்து, கப்பல் போக்குவரத்தை அனுமதிக்க ஈரானுக்கு 48 மணிநேர கெடு விதித்த டிரம்ப், இல்லையெனில் நரகத்தைச் சந்திப்பீர்கள் என எச்சரித்து இருந்தார்.
ஹார்முஸ் நீரிணை மூடப்படும் என்ற ட்ரம்பின் இந்த அறிவிப்பால் மீண்டும் வளைகுடாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் நீரிணை முக்கியத்துவம்:
ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையை உலகப் பொருளாதாரத்தின் இதயத்துடிப்பு என கூறப்படுகிறது. 33 கிமீ அகலம் கொண்ட நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து ஒரு நாள் நிறுத்தப்பட்டால் கூட, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரியளவில் உயர்ந்துவிடும்.
உலகில் பாவிக்கப்ப்படும் கச்சா எண்ணெய்ப் பொருட்களில் சுமார் 20% முதல் 30% வரை ஹார்முஸ் நீரிணை குறுகிய பாதை வழியாகவே செல்கிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் மற்றும் ஈராக் போன்ற நாடுகள் தங்கள் எண்ணெயை உலக நாடுகளுக்கு அனுப்ப இந்தப் பாதையையே நம்பி இருக்கின்றன.
இது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. 33 கிலோமீட்டர் அகலமான நீரிணையில் கப்பல்கள் செல்வதற்கான பாதைகள் இன்னும் குறுகலானவை ஆகும். இந்தப் பாதையின் வடக்குக் கரை முழுவதையும் ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
ஈரான் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே குறிப்பாக அமெரிக்கா உடன் பதற்றம் ஏற்படும் போதெல்லாம், ஹார்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் என்று ஈரான் எச்சரிப்பது வழக்கம். இதனால் இது உலகின் மிகவும் பதற்றமான மற்றும் தற்காப்பு ரீதியாக முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது. இது உலக நாடுகளின் பொருளாதாரத்தை முடக்கும் வல்லமை உடையது.
ஹார்முஸ் நீரிணை என்பது வெறும் கடல் பாதை மட்டுமல்ல, அது உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய கருவியாவும் இருக்கிறது.
டிரம்பின் அடாவடித்தன அறிவிப்பு:
தற்போதைய டிரம்பின் அடாவடித்தனமான நீரிணை முடக்கத்தால் உலகளாவிய கடும் பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த முடிவால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 8% உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு $104.24 ஆகவும், உயர் கச்சா எண்ணெய் 7% உயர்ந்து $102.29 ஆகவும் அதிகரித்துள்ளது.
அதேவேளை ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீதான தாக்குதலை தொடர்ந்து ட்ரம்பை கடுமையாக விமர்சித்து எதிர்த்து வருகின்றன. ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஐரோப்பிய நாடுகள் தங்களது கடற்படைகளை அனுப்பத் தவறினால், உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்திவிடுவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஆனால் சர்வதேச பதற்றம் தற்போது உருவாகி உள்ளது. உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு ஆதாரமாக விளங்கும் இந்த முக்கிய நீரிணை மூடப்படுவது, மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.
இந்த நடவடிக்கைகள் அமெரிக்கா-ஈரான் மோதலைப் புதிய கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது எனக் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
கடந்த வார இறுதியில் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், சிறப்பு தூதர்ஸ்டீவ் விட்காப், ஜெராட் குஷ்னர், பாகிஸ்தான் ராணுவதளபதி ஆசிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் ஈரானுடன் அமைதிப் பேச்சு நடத்தினர். பாகிஸ்தானில் இவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில், அணு ஆயுத திட்டத்தை கைவிட மாட்டோம் என்று ஈரான் கூறியது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, மோசமானவர்களின் கையில் அணு ஆயுதம் இருப்பதை ஏற்க முடியாது. ஹார்முஸ் நீரிணையில் வீசப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானை நரகமாக மாற்றுவோம் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனாலேயே ஹார்முஸ் நீரிணையை மூடும் நடவடிக்கை விரைவில் தொடங்கப்படும். போருக்கு தயாராக உள்ளோம். ஈரானின் பெரும் பகுதியை அழித்துவிட்டோம். தேவைப்பட்டால் மீதமுள்ள பகுதிகளையும் அழிப்போம் என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஆனால் ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை வெளியிட்ட அறிக்கையில், ஈரான் அரசால் அனுமதி வழங்கப்பட்ட சரக்கு கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் நீரிணையை கடந்து செல்ல முடியும். போர்க் கப்பல்கள் நுழைய முயற்சித்தால் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று கடுமையாக எச்சரித்துள்ளது. இதனால் வளைகுடாப் பகுதியில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது.
சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்று இருக்கையில் அமெரிக்காவும் ஹார்முஸ் நீரிணையை வலியுறுத்தி சஇருப்பதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக சர்வதேசமே மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது என்று ஊகிக்கப்படுகிறது.
டிரம்பின் நீரிணை முடக்கும் திட்டம் :
இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், டிரம்ப் இந்த நீரிணையில் கப்பல்களை முடக்க செய்வது தொடர்பாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக உள்ளே செல்லும் மற்றும் வெளியே செல்லும் கப்பல்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்துமாறு தனது அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனாலும் ஈரானின் பிடிவாதம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அனைத்து கப்பல்களும் தடையின்றி உள்ளே வரவும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. ஆனால், ஈரான் அதற்கு ஒத்துழைக்காததால், தற்போது இந்த நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என்று கூறியிருக்கிறார்.
இந்த பாதை வழியாக பயணிக்கும் கப்பல்கள், சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருந்தது. இதை டிரம்ப் ஏற்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக கட்டணம் செலுத்தி கப்பல்கள் பயணிப்பதாகவும், ஈரானுக்கு மறைமுகமாக சுங்க கட்டணம் செலுத்தும் கப்பல்களை குறி வைத்த மறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைதி பேச்சுவார்த்தையின் முக்கிய கட்டமாக இந்த நீரிணை பற்றியே விவாதிக்கப்பட்டது. பாக்கிஸ்தான் பிரதமரை சந்தித்த அமெரிக்க துணை அதிபர், ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பல்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஏனெனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்து 20% இந்த பாதையில்தான் நடக்கிறது. இந்த பாதை மூடப்படும் எனில், அது எரிபொருள் விலையை கடுமையாக உயர்த்தும்.
குறிப்பாக ஆசிய, ஐரோப்பிய நாடுகள் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும். ஏற்கெனவே எல்பிஜி விஷயத்தில் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், நீரிணையை மொத்தமாக அமெரிக்கா மூடினால் இந்தியா மிகப்பெரிய அளவில் பெட்ரோல், டீசல் பிரச்சனையை எதிர்கொள்ளும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்கெனவே அதிகரித்து உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இருவார போர் நிறுத்தம் காரணமாக தற்போது விலை ஓரளவுக்கு குறைவாக இருந்தாலும், மீண்டும் நிச்சயம் விலை ஒரு பீப்பா 115 டாலரை தாண்டும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த பொருளாதார பாரம் எல்லாம் அப்பாவி மக்கள் தலையில்தான் வந்து விழும். இதன் காரணமாகவே தென் ஆசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தியிருக்கின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அரசின் பொதுத்துறை நிறுவனங்களும் விலையை உயர்த்தும். இந்த விலை உயர்வு சங்கிலி தொடர் போல மற்ற பொருட்களின் விலையையும் உயர்த்திவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *