இலங்கை

வெடுக்குநாறி மலையின் பூர்வீக வழிபாடு – 36 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய புகைப்படச் சான்று

வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான வரலாற்றுத் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 1990-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெளியாகியுள்ள அந்தப் புகைப்படமானது 1990-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் திகதி (சித்திரை-03) எடுக்கப்பட்டதாகும். அதில் ஒரு குடும்பத்தினர் மலையின் உச்சிப்பகுதியில் வழிபாட்டிற்காகச் சென்றிருப்பது பதிவாகியுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் இருப்பவர்களில் ஒருவரான தற்போதைய 80 வயது முதியவர், தனது அனுபவப் பகிர்வில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

1990களிலேயே நெடுங்கேணி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஒலுமடு, முல்லைத்தீவு எல்லைக் கிராம மக்கள் வண்டில் கட்டிக்கொண்டு வெடுக்குநாறி மலைக்குச் சென்று சிவபெருமானை  வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக, தொல்பொருள் திணைக்களம் மற்றும் சில தரப்பினர் வெடுக்குநாறி மலையில் 2012-ஆம் ஆண்டிற்குப் பின்னரே இந்து வழிபாடு அல்லது ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றதாகக் கூறி வருகின்றனர்.

ஆனால், 36 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், அங்கு தலைமுறை தலைமுறையாகத் தமிழ் மக்கள் பூர்வீகமாக வழிபாடு நடத்தி வந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மலையைச் சுற்றி அடர்ந்த காடுகளும், ‘வெடுக்குநாறி’ மரங்களும் நிறைந்திருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது.கல்வெட்டுச் சான்றுகள் இங்குள்ள பிராமி கல்வெட்டுகள் மற்றும் குகைகள் இப்பகுதி பல நூற்றாண்டுகளாக வழிபாட்டுத் தலமாக இருந்ததைக் காட்டுகின்றன.

2018-ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதி தொல்பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டு, அங்குள்ள சிலைகள் அகற்றப்படுவதும், வழிபாட்டிற்குத் தடை விதிக்கப்படுவதும் தொடர்கதையாகி உள்ளது. 2024 சிவராத்திரி வழிபாட்டின் போதும் பக்தர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *