இலங்கை

இந்த ஆட்சி கவிழாது என்பது வீண் பேச்சு!; பிரதமர் ஹரிணிக்கு ரஞ்சித் மத்தும பண்டார பதிலடி

“ஆட்சியைப் பாதுகாக்கப் போவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய சவால் விடுவதை விடுத்து, நாட்டின் பொருளாதாரச் சீரழிவைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம் இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் போதே ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் பிரேரணைகளைத் தவிடுபொடியாக்குவோம் எனப் பிரதமர் கூறுவது நகைப்புக்குரியது என்று சுட்டிக்காட்டிய அவர், “நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை முறியடிக்கலாம், ஆனால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியை அரசால் ஒருபோதும் முறியடிக்க முடியாது. மக்களின் ஆணை இப்போது அரசுக்கு எதிராகத் திரும்பத் தொடங்கியுள்ளது” என்றும் கூறினார்.

“ஊழல் ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பற்றிப் பேசும் அரசு, கடந்த சில மாதங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எதனையுமே நிறைவேற்றவில்லை. விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடும் நிலையில், புள்ளிவிவரங்களைக் காட்டி அரசு காலத்தை வீணடிக்கின்றது.” என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

“எதிர்க்கட்சிகளை முடக்கிவிடலாம் என அரசு கனவு காண வேண்டாம். பொய்ப் பிரசாரங்கள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க முயல்வது தேசிய மக்கள் சக்தியே தவிர எதிர்க்கட்சிகள் அல்ல. அரசின் தோல்விகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.” என்றும் அவர் திடமாகக் கூறினார்.

ஜனநாயக ரீதியான எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தாம் தயாராக இருப்பதாகவும், அரசு தனது அதிகாரத் தோரணையை விடுத்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும் என்றும் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. மேலும் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *