இலங்கை

தையிட்டியில் உரிமை கோரப்படாத காணிகளை வெளித்தேவைகளுக்குப் பயன்படுத்தவே கூடாது!- டக்ளஸ் வலியுறுத்து

யாழ். தையிட்டி பகுதியில் மக்களின் பூர்வீக நிலங்களில் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள எஞ்சிய காணி நிலங்களை வெளித்தேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதிகளில், காணி உரித்துடைய ஒரு தொகுதி மக்களிடம் நிலங்களை மீள ஒப்படைப்பதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நில அளவீடு செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்னும் பல காணிகள் உரிமையாளர்களால் அடையாளப்படுத்தப்பட முடியாத நிலையில் உள்ளன. அவ்வாறான காணிகளை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தாது, அவற்றின் பூர்வீக உரித்தாளர்களுக்கே வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் எமது ஆட்சிக் காலத்தில் இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கப் பல முயற்சிகளை முன்னெடுத்தோம். குறிப்பாக, காணிகளை அளவீடு செய்து உரியவர்களிடம் ஒப்படைக்க முயன்றபோது, சிலர் முன்னெடுத்த தேவையற்ற ஆர்ப்பாட்டங்களால் அந்தப் பணிகள் தடைப்பட்டன. அதன் விளைவாகவே இன்றும் இப்பிரச்சினை தீராமல் இழுபறி நிலையில் உள்ளது.

ஒருவேளை சில காணிகளுக்கு உரிமங்களை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படுமானால், அக்காணிகளை எக்காரணம் கொண்டும் வெளித் தேவைகளுக்காகவோ அல்லது வெளியாருக்கு வழங்கவோ முயற்சிக்கக் கூடாது.

மாறாக, அக்காணிகளை அந்தப் பிரதேச மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கோ, கால்நடை வளர்ப்புக்கோ அல்லது அந்த மக்களின் பொதுவான வாழ்வாதாரத் தேவைகளுக்கோ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு.” – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *