இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீதான போலிப் பிரசாரங்கள் – CID இல் முறைப்பாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசான் கஸ்தூரி,  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இரண்டு பிரதான விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.

அண்மையில் நவீனமயப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து வைக்கப்பட்ட கோட்டை பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவமானது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு செயல் என சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அவர் இதன்போது தெரிவித்தார்.

குறிப்பாக, தேசிய தொலைக்காட்சியின் இலச்சினையைப் பயன்படுத்தி, பசான் கஸ்தூரியின் புகைப்படத்தை உள்ளடக்கி, அவரே இந்தச் சேதங்களுக்குப் பின்னால் இருப்பதாகக் காட்டும் வகையில் சோடிக்கப்பட்ட ஒரு போலிப் புகைப்படச் செய்தியை அவர் ஆதாரமாகச் சமர்ப்பித்தார்.

அத்துடன், நாமல் ராஜபக்ஷவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் ஒருவர் கலந்துகொண்டதாகக் கூறப்படும் செய்தியும் ஆதாரமற்றது என அவர் தனது இரண்டாவது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பொது இடங்களில் வெற்றிலை உமிழ்வது ஒரு கலாச்சாரம் என்று பொதுஜன பெரமுன கூறியதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இவ்வாறான வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகத் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாகத் தங்களைப் பழிவாங்கும் நோக்கில் சில குழுக்கள் முன்னெடுத்து வரும் இவ்வாறான அநாகரீகமான மற்றும் போலியான பிரசாரங்களுக்கு எதிராகச் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பசான் கஸ்தூரி மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *