கோடிக் கணக்கில் நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய அரசு; மரிக்கார் எம்.பி. கடும் சாடல்

நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெறவில்லை என்றால் கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையை அரசாங்கம் நிராகரிக்க வேண்டும். அவ்வாறு நிராகரிக்க அரசாங்கம் தயாரா என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பினார்
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய
அவர் மேலும் பேசுகையில், .
நிலக்கரி கொள்வனவில் மாேசடி இடம்பெற்றிருப்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அதனால் இதனை விவாதித்துத் தான் உறுதிப்படுத்த வேண்டியதில்லை. இதில் மோசடி இடம்பெற்றிருப்பதாக 3தடவைகள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்ற திட்டமிடப்பட்ட திருட்டு . ஏனெனில் இந்த நிலக்கரி விநியோகத்தர் 2025 ஆகஸ்ட் 19ஆம் திகதியே பதிவு செய்யப்பட்டிருக்கிறார். பதிவு செய்வதற்கு முன்னரே நிலக்கரி விலைமனு அறிக்கை விநியோகஸ்தருக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வாறு சாத்தியம்?
அதேநேரம் கேள்வி கோரலுக்கு 42 நாட்கள் வழங்கப்படவேண்டும் என்றிருக்கின்றபோது வலுசக்தி அமைச்சர் இந்த கேள்வி கோரலுக்கு 21 நாட்களே வழங்கியுள்ளார் .இதன் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்கள் இந்த கேள்வி கோரலுக்காக தயாராக போதுமான காலத்தை இல்லாமல்செய்யப்பட்டுள்ளது .அதேபோன்று நிலக்கரி விநியோக நிறுவனங்களுக்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள் திட்டமிட்டு, குறித்த நிறுவனத்துக்கு ஏற்றவகையில் திருத்தப்பட்டிருக்கின்றன . அரசாங்கத்தின் இந்த திருத்தங்களுக்கு உடன்படமுடியாமலே நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் பதவி விலகினார். அதேபோன்று சட்டமா அதிபர் கைச்சாத்திடுவதற்கு முன்னரே கேள்வி க்கோரல் விடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு எப்படி செய்ய முடியும்?
அத்துடன் முன்னர் அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது, தற்போதுள்ள வலுசக்தி அமைச்சரை உர கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமித்தார். அங்கு இடம்பெற்ற மோசடிக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு, தற்போது அமைச்சர் பிணையில் இருப்பவர். மேலும் நிலக்கரி இறக்க முடியுமான காலமான கடந்த வருடம் நவம்பர் 13ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதிவரை நிலக்கரி அடங்கிய ஒரு கப்பலைக்கூட கொண்டுவரவில்லை.டிசம்பர் 14ஆம் திகதி வரவேண்டிய நிலக்கரி கப்பல் 31ஆம் திகதியே வந்தது. அதுவும் தரம் குறைந்தது.
ஊழல் மோசடிகளை இல்லாமலாக்குவதாக தெரிவித்தே இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது நிலக்கரி மோசடி மேற்கொண்டு கோடிக் கணக்கில் நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். நிலக்கரி மோசடியை மறைப்பதற்கு இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஆனால் இறுதியில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில், இவர்களின் அனைத்து மோசடிகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெறவில்லை என அரசாங்கம் தெரிவிப்பதாக இருந்தால், கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையை இவர்கள் நிராகரிக்க்க வேண்டும் என்றார்.
![]()