இலங்கை

2012 இல் இருந்து முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர்;  தெளிவான சாட்சிகளுடன் சுரேஷ் சலே கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மிகவும் தெளிவான சாட்சிகளுடனேயே முன்னாள் புலனாய்வு பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாததத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடந்த நேரத்தில் இருந்து பல்வேறு இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. கருத்தடைகள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது இதன் பின்னால் கடும் அரசியல் இருக்கின்றன என்பதனை கூறினோம். அப்போதிருந்த எங்களின் நிலைப்பாட்டில் ஒரு தசமேனும் இப்போது மாற்றம் ஏற்படவில்லை. சம்பவத்தின் பின்னர் 2015 காலத்தில் எமது தேசியப் பட்டியல் வேட்பாளரான இருந்த இப்ராஹிமின் குடும்பத்தினர் இதில் சம்பந்தப்பட்டதால் எம்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு கோரினோம். இந்நிலையில் அவர் கோதாபய காலத்தில் விடுதலையாகியுள்ளதுடன், இப்போது அவர்களின் சொத்துக்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. அவர்களுக்கு எதிராக கடுமையான இனவாத செயற்பாடுகள் நடந்தன. ஆனால் இந்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் யார்? சம்பவத்திற்கு முன்னர், சம்பவத்திற்கு பின்னர் என்று இரண்டு பிரிவுகளாக உள்ளன.

2012ஆம் ஆண்டில் இருந்து முஸ்லிம் விரோத செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்காக முதலீடுகளை செய்தனர். உலக நிலையை பயன்படுத்தி முஸ்லிம்களைத் தாக்கினால் பிரச்சினையில்லை என்பதனை போன்ற நிலைப்பாட்டை உருவாக்கினர். அதற்காக சம்பவங்களையும் உருவாக்கினர். இதனையே ராஜபக்‌ஷக்கள் செய்தனர்.

இதேவேளை தாக்குதலின் பின்னர் அந்த தாக்குதலை யார் நடத்தினார் என்று கண்டுபிடிக்க முடியாத வகையில் திட்டங்களை வகுத்துள்ளனர்.

இதில் முதல் பிரிவும், மூன்றாம் பிரிவும் சஹரான்கள் அல்ல. தாக்குதலின் பின்னர் விசாரணைகளை திசை திருப்பிய செயற்பாடுகளே மிகவும் சூட்சுமான திட்டங்களாகும். விசாரணைகளை நடத்துவதற்கு அப்போதைய அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. செய்தவர்களுக்கே ஆட்சி அதிகாரம் வந்த பின்னர் விசாரணை நடத்திய அதிகாரிகள், விசாரணை நிறுவனங்களை மாற்றினர். அத்துடன் சாட்சியங்களையும் அழித்தனர். எவ்வாறாயினும் நாங்கள் கஸ்டத்திற்கு மத்தியிலும் இப்போது மிகவும் தெளிவான சாட்சிகளுடனேயே முன்னாள் புலனாய்வு பிரதானியை கைது செய்துள்ளோம். இப்போது நாங்கள் உண்மையான பக்கத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *