அமைச்சர் சந்திரசேகருக்கு பதிலளிக்க முயன்ற சாணக்கியன் எம்.பி. யை சபையை விட்டு வெளியேற்ற நேரிடும் என கடுமையாக எச்சரித்த சபாநாயகர்

சாணக்கியன் எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பதிலளித்த நிலையில் அந்தப்பதிலுக்கு பதிலளிக்க முயன்ற சாணக்கியன் எம்.பி.க்கு அனுமதி மறுத்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சாணக்கியன் எம்.பி. யை சபையை விட்டு வெளியேற்ற நேரிடும் எனவும் கடுமையாக எச்சரித்தார்
பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியதையடுத்து நிலையியற் கட்டளை 27 /2 இல் கீழ்விசேட கூற்றை முன்வைத்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா. சாணக்கியன்கடற்றொழில் அமைச்சர் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவதற்கு கப்பம் பெறுகின்றார். எனவே இவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையேல் அடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை கடற்றொழில் அமைச்சருக்கு எதிராகக் கொண்டு வர நேரிடும் என்று தெரிவித்தார்.
சாணக்கியன் எம்.பி. யின் இந்தக் குற்றச் சாட்டுக்கு பதிலளித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், சாணக்கியன் எம்.பி. மற்றும் அவரது குருவான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகளை நான் தான் வடக்கு மாகாணத்தில் வெளிப்படுத்துகிறேன்.அவர்களுக்கு எதிராக செயற்படுகிறேன்.இதனால் தான் அவர் என் மீது குற்றஞ்சாட்டுகிறார்.நான் கப்பம் பெறுவதாக குறிப்பிடுகிறார்.
நான் கப்பம் பெற்றதாக என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் சாணக்கியன் எம்.பி. அது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்கலாம். அல்லது பாராளுமன்றத்தில் முறைப்பாடளிக்கலாம்.அதனை விடுத்து போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த சாணக்கியன் எம்.பி. அமைச்சர் சந்திரசேகருக்கு பதிலளிக்க முயன்றபோது அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை.இதனால் அவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி உரையாற்றுவதற்கு முயற்சித்தார்.இருப்பினும் சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை.இதனால் சபை நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சாணக்கியன் எம்.பி.யை நோக்கி ‘ அமைதியாக இருங்கள் இல்லையேல் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும்’ என்று சபாநாயகர் எச்சரித்தார்.
![]()