இலங்கை

2017 முதல் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் திட்டம்; பிள்ளையான் தெரிவித்த முக்கியமான தகவல்கள்! விடுதலைப் புலிகள் மீது திசை திருப்பி,சஹ்ரான் திட்டமிட்டு பாதுகாக்கப்பட்டார்

வவுணதீவு பொலிஸார் படுகொலை குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்திருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்காது.விசாரணைகளை விடுதலை புலிகள் அமைப்பின் மீது திசைத்திருப்பி,சஹ்ரான் திட்டமிட்ட வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளார்.இந்த குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார்.ஆனால் கடந்த வாரமளவில் பிரதான சூத்திரதாரியை தேடிச் செல்லும் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சென்றிருந்தார். அங்கு பிரதான சூத்திரதாரி கிடைக்கவில்லையோ தெரியவில்லை. இந்த குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றங்களில் விசாரணைகளில் இடம்பெறுவதால் சகல விடயங்களையும் என்னால் வெளிப்படுத்த முடியாது.

2019.04.21 ஆம் திகதி குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் 8 குண்டுத்தாக்குதல்கள் சம்பவங்கள் இடம்பெற்றன.காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த சஹ்ரான் உட்பட அவரது தரப்பினரால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் திட்டமிடப்பட்ட சூழ்ச்சியே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் என்பது வெளிப்பட்டுள்ளது.

2018.11.31 வவுண தீவில் இரண்டு பொலிஸார் படுகொலை, 2018.12.22 மாவனெல்ல புத்தர்சிலை புடைப்பு, 2019.01.19. வனாத்தவில்லில் வெடி பொருட்களுடன் நால்வர் கைது, 2019.03.10 மாவனெல்ல பகுதியில் தஸ்லின் என்பவர் மீது துப்பாக்கிச்சூடு, 2019.04.14 மட்டக்களப்பு, காத்தான்குடி பாலமுனை பகுதியில் வாகனம் ஒன்றை வெடிக்கச் செய்தமை உள்ளிட்ட சகல சம்பவங்களும் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவங்கள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது .

அதேபோல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் அசாத் மௌலானா வெளிப்படுத்திய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தற்போது நாளாந்தம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொத்துவில் பகுதியைச் சேர்ந்த சரத் சமந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுணதீவு பொலிஸார் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் தவறாக வழிநடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுணதீவு பொலிஸார் படுகொலையின் சந்தேக நபர்களாக புனர்வாழ்வுப் பெற்ற விடுதலைப் புலிகள் போராளிகளான அஜந்தன் மற்றும் சர்வநாதன் ஆகியோர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் .வவுணதீவு பொலிஸார் படுகொலை குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்திருந்தால் 2019.04.21 ஆம் திகதி குண்டுத்தாக்குதல் இடம்பெற்றிருக்காது.விசாரணைகளை விடுதலை புலிகள் அமைப்பின் மீது திசைத்திருப்பி,சஹ்ரான் திட்டமிட்ட வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பிலும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்கு உதவி வழங்கிய குற்றத்துக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முதலாவது சாட்சியாளராகவும் காணப்படுகிறார்.இவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அடிப்படைவாதம்,குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியதாக நன்கு அறிந்திருந்தும் சுரேஷ் சலே எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதேபோல் குண்டுத்தாக்குதலின் பின்னரும் குற்றவாளிகளுடன் தொடர்புடையவர்களை பாதுகாப்பதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு வழங்கியுள்ளார்.

குண்டுத்தாகுதலின் பிரதான சூத்திரதாரி யார் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். முன்னாள் ஜனாதிபதிகளான கோத்தபாய ராஜபக்ச,ரணில் விக்கிரமசிங்க பிரதான சூத்திரதாரி குறித்து எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை. கோத்தபாய ஆட்சிக்கு வந்து 48 மணித்தியாலத்துக்குள் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்.

சட்டவிரோதமான முறையில் 704 அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே பிரதான சூத்திரதாரி தொடர்பில் முறையான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. ஆகவே உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு சென்று எதிர்க்கட்சித் தலைவர் பிரதான சூத்திரதாரியை தேட முடியாது. ஏனெனில் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைத்திருப்பிய கோட்டபய ராஜபக்ஷவின் சகா தான் உதய கம்மன்பில.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கடத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் முக்கிய தரப்பினர் கைது செய்யப்படும் போது பலர் கலக்கமடைவது ஆச்சரியத்துக்குரியதல்ல,

குண்டுத்தாக்குதல்களை பயங்கரவாதி சஹ்ரான் உட்பட அவரது தரப்பினர்கள் நடத்தினார்கள்.ஆனால் அவர்களை ஒரு தரப்பினர் தொடர்ச்சியான வழிநடத்தியுள்ளனர் இது சாட்சியங்கள் ஊடாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *