முச்சந்தி

நேட்டோ சாதித்த எதிர்ப்புரட்சி கொள்கையும்… இராணுவ வல்லாதிக்க நோக்கமும்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறினால், அது ‘உலகின் போலீஸ்காரர்’ என்ற அதன் பங்கின் முடிவைக் குறிக்கும். அமெரிக்கா வெளிநாட்டுப் போர்களில் அல்ல, அதன் சொந்த எல்லைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் ஏற்கனவே கூறியுள்ளார்)
அமெரிக்காவை நேட்டோவிலிருந்து வெளியேற்ற முடியுமா ? அல்லது அமெரிக்கா நேட்டோவிலிருந்து வெளியேறுகின்றதா என்ற கேள்விகள் ஐரோப்பிய இராஜதந்திர வட்டரங்களில் எழுந்துள்ளன. அப்படி வெளியேற்றினாலோ அல்லது வெளியேறினாலோ என்ன நடக்கும் என்பதை அலசும் ஓர் ஆக்கமாகும்.
ஐரோப்பாவுடன் முரண்படும் டிரம்ப்:
ஐரோப்பிய நாடுகளுடன் முரண்படும் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவை நேட்டோவிலிருந்து விலக்கிக் கொண்டால், உலகளாவிய அதிகார சமநிலை ஒரே இரவில் மாறும் நிலை ஏற்படும். ஐரோப்பா இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பாரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும்.
அதன் விளைவாக உலகின் வலுவான பாதுகாப்பு அமைப்பான நேட்டோ சரிந்துவிடும் அல்லது ஒரு காகிதப் புலியாக மாறும் என்றும் நம்பலாம்.
அத்துடன் அமெரிக்க நிதி மற்றும் இராணுவ சக்தி இல்லாமல், நேட்டோ அமைப்பில் தங்களுக்குள் தலைமைக்காக போராடும் நிலை ஏற்படும்.
அமெரிக்கா தற்போது நேட்டோவின் பாதுகாப்பு செலவினங்களில் எழுபது சதவீதத்தை செலுத்துகிறது. அது இல்லாமல், ஐரோப்பிய நாடுகள் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை வெகுவாக அதிகரிக்கவோ அல்லது இராணுவ வீழ்ச்சியை ஏற்கவோ கட்டாயப்படுத்தப்படும்.
மேலும் பல தசாப்தங்களாக அதன் சொந்த இராணுவப் படையை விரைவாக உருவாக்க முடியாவிட்டால், ரஷ்யா போன்ற பெரிய சக்திகளுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பற்றதாக இருக்கும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.
1949 இல் நேட்டோ உருவாக்கத்தின் பின்னர், இடதுசாரி நாடுகளில் ஒரு வன்முறை, எதிர்ப்புரட்சிக் கொள்கையைப் பின்பற்றியது. அமெரிக்கா, பிரான்ஸ் பிற நேட்டோ நாடுகள் குறிப்பாக இந்தோனசியா, கொரியா, அல்ஜீரியாவில் காலனித்துவ போர்களை நடத்தி வந்தன.
 
எதிர்ப்புரட்சி கொள்கையும் உருவாக்கமும்:
அதன் பின்னர் நேட்டோ கிரீஸ் மற்றும் துருக்கியில் ஆட்சிக்கவிழ்ப்புகளை ஆதரித்ததோடு, சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி தேசியவாத அரசாங்கங்களுக்கு எதிரானவர்களுக்கு ஆதரவளித்தது.
எவ்வாறாயினும், அமெரிக்க ஆளும் உயரடுக்கில் சோவியத் யூனியனை “கட்டுப்படுத்துவதன்” மூலமாகவோ அல்லது இராணுவப் “பின்வாங்கல்” மூலமாகவோ, இடதுசாரி எழுச்சிகளை பல நாடுகளிலும் வன்முறைகளால் அழித்தமை வரலாறாகும்.
நேட்டோ 75 ஆண்டு சாதனை:
கடந்த ஆண்டு நேட்டோ 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வாஷிங்டனில் மூன்று நாள் ஜூலை 8 முதல் 11 வரை இந்த உச்சிமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டின் முக்கிய விடயமாக உக்ரைனுக்கான இராணுவ உதவி அமைந்தது. உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டமைப்பில் உக்ரைன் நேட்டோ உறுப்பினருக்கான “திரும்ப முடியாத”(Irreversible Path)பாதையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அத்துடன் இராணுவ உதவியாக குறைந்தபட்சம் 43 பில்லியன் டாலர் வழங்க உறுதியளித்தது.
2024 இல் ஒவ்வொரு நேட்டோ நாடும் அதன் இராணுவத்திற்காக எவ்வளவு செலவழிக்கிறது என்பதை யாரும் அறிந்தால் அதிர்ந்து போய்விடுவார்கள். உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவக் கூட்டணியின் 32 உறுப்பினர்கள் இந்த ஆண்டு 1.47 டிரில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலும் 2% ஆக உயர்த்த நேட்டோ தனது உறுப்பினர்களை வேண்டுகிறது.
2006 ஆம் ஆண்டில், நேட்டோ கூட்டணியின் இராணுவத் தயார்நிலையை உறுதி செய்வதற்காக, அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்தபட்சம் 2 சதவீதத்தை பாதுகாப்புச் செலவீனங்களுக்கு வழங்க, கூட்டணியின் பாதுகாப்பு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர். தற்போது, ​​அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் (32 இல் 23) இந்த உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளனர்.
சோவியத்தை உடைக்கும் திட்டம்:
பனிப்போரின் ஆரம்ப காலத்தில், அணு ஆயுதப் போரை ஆபத்தில் ஆழ்த்துவதன் மூலம் கிழக்கு ஐரோப்பாவை பயமுறுத்தி வைத்தனர். எவ்வாறாயினும், அமெரிக்க அரசு தனது நீண்டகால இலக்கான சோவியத் ஒன்றியத்தை அழிப்பதை ஒருபோதும் கைவிடவில்லை. இறுதியில் பனிப்போர் 1991 இல் முடிவுக்கு வந்தது.
சோவியத் ஒன்றியத்தில் 1917 அக்டோபர் புரட்சியால் உருவாக்கப்பட்ட சோசலிச நடைமுறையை கலைத்து, முதலாளித்துவத்தை மீட்டெடுத்து, வார்சா ஒப்பந்தத்தையும் சோவியத் யூனியனையும் கலைத்தது. சோவியத் யூனியனால் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆபத்துடன் தனது இருப்பை எப்போதும் நியாயப்படுத்தி வந்த நேட்டோ, பனிப்போரின் பின்னர் தன்னைக் கலைக்கவில்லை.
ரஷ்யாவை சுற்றி நிழல் போர்:
அமெரிக்க அரசு சோவியத் யூனியனின் கலைப்பை தொடர்ந்து, கோர்பச்சேவ், யெல்ட்சின் பின்னர் புட்டின் மூலமாக ரஷ்யா மீதான காலனி ஆதிக்கத்தை விரும்பியது.
ஆயினும் புட்டினின் எதிர்ப்பால், நேட்டோவும் அமெரிக்காவும் ரஷ்யாவை சுற்றி நிழல் போரை தொடங்கின. நேட்டோ ரஷ்யாவை நோக்கி திட்டமிட்டு முன்னேறி கிழக்கு ஐரோப்பா முழுவதையும் (பால்டிக் நாடுகளுடன்) மற்றும் முன்னாள் சோவியத் யூனியனின் சில பகுதிகளையும் இணைத்துக் கொண்டு ரஷ்யாவை பகைக்க தொடங்கியது.
இதன் வழியே அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகள் தங்கள் சொந்த நலன்களை பின்பற்றி, அதன் வழியை நேட்டோவை பின்பற்றி வருகின்றனர்.
மத்திய கிழக்கில் நேட்டோ:
அமெரிக்கா 1990 இல் ஈராக்கை முதன்முதலில் தாக்கியது. 1999 இல், நேட்டோ ஐ.நா ஆணை இல்லாமல் – சர்வதேச சட்டத்தை மீறி – சேர்பியா மீது குண்டுவீசி கொசோவோவை பிரிந்து செல்ல கட்டாயப்படுத்தியது.
அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டில், நேட்டோ முதன்முறையாக பரஸ்பர பாதுகாப்பு விதியை செயல்படுத்தி ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. ஆப்கான் நாட்டினை அழிவுக்கு உள்ளாக்கி, 20 ஆண்டுகள் நீடித்த இந்தப் போர் தலிபான்களின் வருகையுடன் முடிவுக்கு வந்தது.
ஈராக், லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிரான அடுத்தடுத்த போர்கள் உத்தியோகபூர்வ நேட்டோ உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மத்திய கிழக்கில் நடந்த போர்களுக்கு இணையாக, கிழக்கு ஐரோப்பாவிலும், முன்னாள் சோவியத் யூனியனின் பல நாடுகளிலும் ரஷ்யாவிற்கு எதிரான பல போர்களை நேட்டோ ஊக்கப்படுத்தியது.
ரஷ்ய தாயும் உக்ரேனிய சேயும்:
சோவியத் உடைவின் பின் உலகின் மிக சக்திவாய்ந்த நேட்டோ இராணுவக் கூட்டணி 12ல் இருந்து 32 உறுப்பினர்களாக வளர்ந்தது. கடந்த ஆண்டு, அதன் பாதுகாப்புக்காக 1.3 டிரில்லியன் டொலர்கள் அல்லது உலக இராணுவச் செலவில் 60 சதவிகிதத்தை நேட்டோ செலவழித்தது. அமெரிக்க இராணுவ வரவுசெலவுத் திட்டம் மட்டும் மொத்தம் 905 பில்லியன் டொலர்களாகும். இது மற்றய நாடுகளை விட அதிகமாகும். மாறாக, சீனா 220 பில்லியன் மற்றும் ரஷ்யா 109 பில்லியன் பாதுகாப்புக்காக மட்டுமே செலவிட்டுள்ளது.
2014 முதல் ரஷ்யாவுடன் போருக்கு திட்டமிட்டு, அமெரிக்கா மேற்கத்திய சார்பு கைப்பாவை ஆட்சியை உக்ரைனில் நிறுவுவதற்கான ஒரு சதியை ஆதரித்தது. நேட்டோவும் அமெரிக்காவும் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கி வந்தது. இறுதியில் 2022 இல் ரஷ்யா தாயும் சேயுமாக வாழ்ந்த அயலவர்களுடன் தாக்குதலை மேற்கொள்ளத் தூண்டியது.
இதன் பின்னர், ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரேனியர்களை பீரங்கித் தீவனமாகப் பயன்படுத்தி, நூறாயிரக்கணக்கான உக்ரேனிய உயிர்களைப் பலி கொடுத்து வரும் நேட்டோ, அணுவாயுத மோதலாக அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதும் உண்மையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *