முச்சந்தி

வவுனியாவில் சுட்டெரிக்கும் வெயில்: நிழல் தந்த மரங்கள் வெட்டிச் சாய்ப்பு

வவுனியா மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் ஒன்றான குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் நின்ற நிழல் தரும் மரங்கள், அரச அதிகாரிகளால் வெட்டப்பட்டு வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் தற்போது வழமைக்கு மாறாக கடும் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மரங்களின் நிழலையே பெரிதும் நம்பியுள்ளனர். இந்நிலையில், குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் பல வருடங்களாக நிழல் தந்த மரங்கள் திடீரென வெட்டப்படுவதால் அவ்வீதியால் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் கண்காணிப்பு அல்லது அனுமதியுடனேயே இந்த மரங்கள் வெட்டப்படுவதாகத் தெரியவருகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய வன பாதுகாப்பு திணைக்களமே, கடும் வெயில் காலத்தில் இவ்வாறான மரங்களை வெட்ட அனுமதி வழங்கியுள்ளமை குறித்து சூழலியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“ஏற்கனவே வெயிலின் கொடுமை தாங்க முடியவில்லை. இருக்கும் ஒரு சில மரங்களையும் வெட்டிவிட்டால் வீதியில் நடக்கவே முடியாது. அபிவிருத்தி என்ற பெயரிலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ மரங்களை அழிப்பது எமது எதிர்கால சந்ததிக்குச் செய்யும் துரோகம்” என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மரம் நடும் திட்டங்களை அரசாங்கம் ஒருபுறம் முன்னெடுத்து வரும் நிலையில், மறுபுறம் செழிப்பாக வளர்ந்துள்ள மரங்களை வெட்டிச் சாய்ப்பது முரணான செயலாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே வவுனியா மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *