முச்சந்தி
ஈரான் போர் நிறுத்தம்; அமெரிக்காவின் சரணாகதி?… பாரசீக எழுச்சியின் மண்டியிடா வீரம் !…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஈரானின் புவியியல் அத்துடன் அதன் போர் வியூகங்களை கட்டுப்படுத்தத் தெரியாமல், அமெரிக்கா யுத்தம் நடத்தி தற்போது சரணாகதி நிலையை அடைந்துள்ளது. வளைகுடாப்
போரில் ஈரானைத் தோற்கடிப்பது இனிச் சாத்தியமில்லை. இதன் பொருள் என்னவென்றால், போரின் முடிவில் ஆயிரக்கணக்கான இழப்புகள் இருந்தபோதிலும், ஈரானே இறுதியில் வெற்றியாளராக மாறியுள்ளது.
கடந்த ஆறுகால போரில் தோற்காமல் இருப்பதன் மூலம் ஈரான் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெறாமல் இருப்பதன் மூலம் அமெரிக்கத் தரப்பு தோற்றுக் கொண்டுள்ளது. இந்த யதார்த்த உண்மையை மேற்குலக நாடுகள் தற்போது புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏனெனில் முன்னைய அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களில், அமெரிக்க படு தோல்வி அடைந்தாலும், அதற்கு ஒத்து ஊதிய மேற்குலக நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றன.
இனியும் ஆக்கிரமிப்பு போர் வேண்டாம் என்ற நிலையில் மேற்குலக – ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த யுத்தத்தில் ஈரான் நேரடியாக தனித்து போரிட்டு வெற்றியீட்டி விட்டது. உடனடி பொருளாதார நெருக்கடி உலக நாடுகளுக்கு இருக்கும் ஆனால் இதன் நீண்ட கால அரசியல் நலன்களை உலகமே அனுபவிக்கப் போகிறது என்பதே உண்மையாகும்.
பாகிஸ்தான் சமரச தலையீடு

பாகிஸ்தான் மத்தியஸ்த முயற்சியால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதீத போர் நிலையில் இருந்த அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் இந்த போர் நிறுத்தத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு, ஈரான் மீதான பாரிய தாக்குதல்களை நிறுத்த அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோரின் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த போர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரானை மிரட்டும் வகையில் ஒரு நாகரிகமே அழிந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த யுத்த நிறுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று ட்ரம்ப்
தெரிவித்தார். ஆனாலும் கள நிலவரப்படி அமெரிக்காவால் வெல்ல முடியாத மற்றொரு போராகவே தெஹ்ரான் அறிவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான 45 நாள் காலக்கெடு மற்றும் 40 நாள் தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் முதலில் கூறிய அமெரிக்க நிபந்தனைகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு, ஈரான் முன்வைத்த நிபந்தனைகளை வாசிங்டன் தலைமை ஏற்றுள்ளது.
முக்கியமாக உலக நாடுகளின் எரிபொருள் பொருளாதார நெருக்கடி காரணமாக ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்காக திறக்க சம்மதித்ததை அடுத்து இந்த ஒப்பந்தம் உடனடியாக செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் லெபனானில் இன்னும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் உள்ள இஸ்ரேல் நிலைப்பாடு மாறவில்லை. ஈரான் உடனான போர் நிறுத்தத்தை வரவேற்றாலும், லெபனான் மீதான தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
போர் நிறுத்த நிபந்தனைகள் :
அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
ஆனாலும் இந்த இரண்டு வாரப் போர் நிறுத்தம் ஒரு முக்கிய நிபந்தனையின் அடிப்படையில் எட்டப்பட்டுள்ளது. உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாகவும், பாதுகாப்பாகவும் உடனடியாகத் திறக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
ஆனாலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் போக்குவரத்தை, தனது இராணுவம் ஒருங்கிணைக்கும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் தனது தரப்பில் 10 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ள போதிலும், இந்த தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் சீரடையும் என உலகம் முழுவதும் எதிர் பார்க்கப்படுகிறது. இந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை 18% வரை சரிந்துள்ளதுடன், தங்கம் விலை உயர்ந்துள்ளது
ஈரானின் 10 அம்ச திட்ட விவரம்:
1. ஈரான் மீது மீண்டும் தாக்கப்படாது என்பதற்கான உத்தரவாதம் அமெரிக்கா மற்றம் அதன் நட்பு நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும்.
2. போர் தாக்குதல் நிறுத்தம் மட்டுமல்ல, போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும்.
3. லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
4. ஈரான் மீதான அனைத்து அமெரிக்கத் தடைகளையும் நீக்க வேண்டும்.
5. ஈரானிய நட்பு நாடுகளுக்கு எதிரான அனைத்து பிராந்திய தாக்குதல்கள் போர்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
6. இதற்குப் பதிலாக, ஈரான் ஹார்முஸ் நீரிணையைத் திறக்கும்.
7. இதேபோல் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலுக்கும் 2 மில்லியன் டாலர் ஈரான் கட்டணத்தை விதிக்கும்.
8. ஈரான் இந்தக் கட்டணங்களை ஓமன் நாட்டுடன் பகிர்ந்து கொள்ளும்.
9. ஹார்முஸ் நிரிணை வழியாகப் உலக நாடுகளின் கப்பல் பாதுகாப்பாகச் செல்வதற்கான விதிகளை ஈரான் வழங்கும்.
10. ஈரான் ஹார்முஸ் கட்டணங்களை இழப்பீடுகளுக்குப் பதிலாகப் புனரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும்.
மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தான்:

மத்தியஸ்தராகச் செயல்பட்டு வந்த பாகிஸ்தான், தனது காலக்கெடுவை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்குமாறு டிரம்பைக் கேட்டுக் கொண்டதுடன், வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரையும் அழைத்துள்ளது.
பாகிஸ்தானின் தலையீட்டால் டிரம்ப் மற்றும் ஈரான் ஆகிய இருவருக்கும் போரை நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்த ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. ஆனால் இஸ்ரேல் மீண்டும் தலையிட்டு மீண்டும் போர் நிலைக்கே திரும்பி வருமா என்பதை எதிர் வரும் நாட்களில் பார்க்கலாம்.
இதேவேளை ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளையும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் அழைத்துள்ளார். இதற்கு முன்னதாக ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் வகையில் பாகிஸ்தான் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை முன்மொழிந்ததை அடுத்து இந்த பேச்சுவார்த்தை அழைப்பை பாகிஸ்தான் விடுத்துள்ளது.
தொடரும் ஏவுகணை தாக்குதல்கள்:
போர்நிறுத்த அறிவிப்புக்குப் பிறகும் பல ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன. ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சிறிது நேரத்திலேயே, வளைகுடா பிராந்தியம் மற்றும் இஸ்ரேல் முழுவதும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க இராணுவம் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளது, ஆனால் இஸ்ரேல் இன்னும் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் ஈரான் அரசும் ஏவுகணை தாக்குதலை நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் யார் அரபு நாடுகளுக்கு எதிராக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வருகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரானின் மண்டியிடா வீரம்:
ஈரான் மீதான தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நிறுத்த வேண்டுமென கோரவில்லை. இதன் மூலம் ஐநா சபை என்றொரு அமைப்பு காலாவதியாகிப்போனதை உலகம் இப்போது உறுதியாக நம்பத் தொடங்கியுள்ளது. ஒரு நாட்டின் அதிபரின் தனிப்புட்ட விருப்பங்களின் அடிப்படையில், இன்னொரு நாட்டின் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகள் மீது குண்டுவீசி தாக்குதலை நடத்துவது அநாகரிகமாகும். மேலும் இதனைப் பற்றிப் பகிரங்கமாகப் பேசுவது மனிதநேயத்திற்கு எதிரான ஒரு தெளிவான குற்றமாக இருந்தும் ஐநா சபை மௌனம் காத்து வந்தமை கவலைக்குரியதே.
இந்த போரின் மூலம் சிதைந்து போன ஈரானின் ஒற்றுமை, மீண்டும் வலுப் பெற்றுள்ளது. ஈரானை குண்டுவீசித் தாக்குவதன் மூலம் முழு ஈரானையும் அமெரிக்கா ஒன்றிணைத்துள்ளது. ஈரான் இப்போது ஒரு குடும்பமாக உள்ளது. ஈரானுக்குள் அமெரிக்க படைகள் நுழைந்தால், இந்த முழுக் குடும்பத்தையே எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும்.

ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் கூறியிருந்தமை உலகளவில் பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் எமது நிபந்தனைகளை ஏற்காவிட்டால், நாம் ஈரானை குண்டுவீசி கற்காலத்திற்குத் தள்ளுவோம் என டொனால்ட் டிரம்ப் ஆற்றிய மிரட்டல் உரைக்கு ஒரு பதிலடியாக ஈரான் அரசு தலைவர் கூறிய கருத்து, ஈரானின் மண்டியிடா வீரத்தை வெளிப்படுத்தி உள்ளது.
கைகளில் ஆயுதங்களுடன் ஏழு மில்லியன் இளைஞர்கள் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அண்மையில் ஈரான் பாராளமன்ற சபாநாயகர் தெரிவித்தமை அமெரிக்காவின் சரணாகதி நிலைக்கு வழிவிட்டுள்ளது.

![]()