நாட்டை எப்படி முகாமைத்துவம் செய்வது என இந்தியாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்

நெருக்கடியான காலகட்டங்கள் ஏற்படும்போது நாட்டை எப்படி முகாமைத்துவம் செய்வது என இந்தியாவிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜீவ சேனசிங்க அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில்,
ஏப்ரல் மாதம்வரை எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வந்தது. அவ்வாறு எரிபொருள் இருக்குமாக இருந்தால் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
உலக வங்கியின் அறிக்கையின் பிரகாரம் இலங்கை ஆசியாவில் அதிக மின்சார கட்டணம் அறவிடும் நாடு, நூற்றுக்கு 33 வீதமானவர்களுக்கு முறையான உணவு இல்லை. இளைஞர்களுக்கு தொழில் இல்லை. 290 ரூபாவுக்கு இருந்த டொலர் தற்போது 315 ரூபா.எரிபொருள் விலை அதிகரிப்பில் உலகில் 3ஆவது இடத்தில் உள்ள நாடு என பதிவுகள் உள்ளன. இதுதன் இவர்கள் செய்த சாதனைகள் .
அதனாலே இவர்களுக்கு அனுபவம் இல்லை, போராட்டம் செய்ய மாத்திரமே முடியும் என நாங்கள் தெரிவித்து வந்தாேம். சம்பூரை ஆரம்பிப்பதற்கு இடமளிக்கவில்லை. அதனால் பிரபாகரனும் ஜே .வி.பி. யினருமே நாட்டை அழித்தனர். நாட்டில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்கவிடாமல் இவர்களே தடுத்து வந்தார்கள்.எனவே நாட்டில் நெருக்கடியான காலகட்டங்கள் ஏற்படும்போது எவ்வாறு நாட்டை முகாமைத்துவம் செய்வது என இந்தியாவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். ஜனாதிபதி என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார்.
எரிபொருள் விலையை குறைப்பதாகவும் அரிசி இறக்குமதி செய்வதில்லை என்றே தெரிவித்தார்கள். ஆனால் எரிபொருள் விலை அதிகரிப்பில் இலங்கையை 3ஆவது இடத்துக்கு கொண்டுவந்திருக்கின்றார்கள் . தொடர்ந்து அரிசி இறக்குமதி செய்து வருகிறார்கள். நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நாங்கள் தெரிவித்தபோது, அதனை தொடர்ந்து மறுத்துவந்தார்கள். இறுதியில் ஜனாதிபதி அதனை ஏற்றுக்காெண்டுள்ளார்.
அரசாங்கத்தின் நிலக்கரி மோசடி காரணமாக எதிர்காலத்தில் நூற்றுக்கு 50வீத மின்சார நெரு்க்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது . மத்திய கிழக்கு யுத்தத்தை அடிப்படையாகக்கொண்டு எந்த நாடும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த சாதனையையும் செய்துள்ளது என்றார்.
![]()