இலங்கை

செம்மணிப் புதைகுழி அகழ்வுக்கு நிதி இதுவரை விடுவிக்கப்படவில்லை

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதிக்கான பாதீடு நீதி அமைச்சால் இதுவரை அங்கீகரித்து விடுவிக்கப்படவில்லை.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பிலான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் பகுதியில் உள்ள நீர் வற்றி அது அகழ்வுக்கேற்ற நிலையில் இருப்பதாக சட்ட வைத்திய அதிகாரியால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்ட போதும் அதற்கான அனுமதி நீதி அமைச்சிடமிருந்து கிடைக்கப்படவில்லை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாதீட்டுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றால் அகழ்வு பணிகளை ஆரம்பிக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரியால் தெரிவிக்கப்பட்டது.

இதே வேளையிலே எலும்பு எச்சங்கள் தொடர்பான பரிசோதனைக்காக முன்வைக்கப்பட்ட மற்றொரு பாதீட்டில் உள்ள குறைபாடு காரணமாக திருத்திய பாதீட்டை தற்போது சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இதே வேளையில் அகழ்வு நடைபெறும் பகுதியில் நடத்தப்பட்ட மண் மாதிரி பரிசோதனை, அகழ்வில் மீட்கப்பட்ட தடயப் பொருட்களின் கார்பன் பரிசோதனை அறிக்கைகள் இதுவரை தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவிடம் இருந்து கிடைக்கப்படவில்லை என்ற விடயமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் கட்டளைகளை பிறப்பித்த நீதிவான், குறித்த வழக்கை எதிர்வரும் 21ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *