உலகம்

ஈரான் போரில் அமெரிக்க பங்கு ; ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் அதிரடி தகவல்

ஈரானில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது, அந்நாட்டு எதிர்ப்புக் குழுக்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் அமெரிக்கா ஆயுதங்களை வழங்கியதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாகப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ஃபொக்ஸ் நியூஸ் (Fox News) ஊடகவியலாளர் ட்ரே யிங்ஸ்ட்-க்கு (Trey Yingst) வழங்கிய தொலைபேசி நேர்காணலிலேயே ட்ரம்ப் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

அதில், ஈரானிய போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா பெருமளவிலான துப்பாக்கிகளை வழங்கியதாகவும், இவை குர்து இனக்குழுக்கள் வழியாக அனுப்பப்பட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பெப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே, ஈரானிய அரசாங்கத்தை நிலைகுலையச் செய்யவும், கவிழ்க்கவும் அமெரிக்கா நேரடி முயற்சிகளில் ஈடுபட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானிய அதிகாரிகளுடன் இராஜதந்திர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த அதே காலப்பகுதியிலேயே, இந்த ரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொண்டு வரும் போர் 38-வது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானில் இதுவரை 2,076 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 26,000 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.

“இந்தப் போராட்டங்கள் இயற்கையானவை அல்ல, வெளிநாட்டு ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் தூண்டப்பட்டவை” என்ற ஈரானின் நீண்டகால வாதத்திற்கு ட்ரம்பின் இந்த அறிக்கை வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

எனினும், ட்ரம்பின் கருத்துக்கள் அடிக்கடி மாறுபடுவதால், அமெரிக்காவின் நேரடித் தலையீடு எந்த அளவிற்கு இருந்தது என்பதை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலவுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *