இலங்கை

அநுரவும் அரசும் தோற்றால் நாட்டிற்கு பேரழிவாகிவிடும்; மீண்டும் திருடர்கள் வந்துவிடுவார்கள் என்கிறார் ராஜங்கனை தேரர்

தற்போதைய அரசாங்கத்தின் விவசாயத் துறை அமைச்சர் லால் காந்தாவின் வீடு மற்றும் அது குறித்து சமூகத்தில் நிலவும் பேச்சுக்கள் தொடர்பாக, ராஜங்கனை சத்தரத்த தேரர், அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் தோல்வியடைந்தால், அது நாட்டிற்கு ஒரு பேரழிவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

விவசாய அமைச்சரின் வீடு மற்றும் அவர் அளித்த நன்கொடை குறித்துப் பேசுவதாகக் கூறும் ராஜங்கனை சத்தரத்த தேரர், அந்த வீட்டைப் பெற்றதாகப் பல்வேறு தரப்பினர் அவர் மீது குற்றம் சாட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டுகிறார்.

குறிப்பாக நிசங்க சேனாதிபதிதான் இந்த வீட்டைக் கொடுத்தார் என்று சிலர் கூறுவதாக தேரோ குறிப்பிடுகிறார்.

“100 நண்பர்களை அழைத்தவுடன் அவர்களிடமிருந்து 5 கோடி ரூபா பெற முடியும்” என்று அமைச்சர் லால் காந்தா கூறியுள்ளதையும் தேரர் கேள்விக்குள்ளாக்குகிறார்.

அந்த நண்பர்கள் யார், இந்த வீடு எப்படி கட்டப்பட்டது என்பது குறித்துத் தெளிவாகத் தெரிவிக்குமாறு தேரர் அமைச்சர்லால் காந்தாவிடம் கேட்டுள்ளார்.

“மக்களை ஏமாற்ற முயற்சிக்காதீர்கள், உங்கள் வீட்டை எப்படி கட்டினீர்கள் என்பதைத் தெளிவாக வெளிப்படுத்துங்கள்,” என்று அவர் வலியுறுத்துகிறார்.

மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட கதியின் கடந்தகால உதாரணங்களைச் சுட்டிக்காட்டி, போரில் வெற்றி பெற்ற ராஜபக்சர்கள் கூட மக்களை ஏமாற்ற முயன்றதால் தலைமறைவாக வேண்டியிருந்தது என்று கூறுகிறார்.

மக்களின் நம்பிக்கை உடைந்தால், தற்போதைய ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ தெருக்களில் இறங்க முடியாத ஒரு நிலை ஏற்படக்கூடும் என்றும் தேரர் எச்சரிக்கிறார்.

இந்த அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதியையோ வீட்டிற்கு அனுப்புவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், அவர்கள் தோல்வியடைந்தால், அது நாட்டிற்கு ஒரு பேரழிவாக இருக்கும் என்றும், ஏனெனில் வெளியேற்றப்பட்ட திருடர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள் என்றும் சத்தரத்த தேரர் கூறுகிறார்.

நீங்கள் செல்வம் பெறுவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் அவை கறுப்புப் பணமாக இருக்கக்கூடாது என்று கூறுகிறார்.

இந்தக் கூற்றை வெறுப்பின் காரணமாக வெளியிடவில்லை என்றும், மாறாக, மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது வைத்துள்ள கடைசி நம்பிக்கையைப் பாதுகாத்து, அது வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாகவே வெளியிடுவதாகவும் சத்தரத்த தேரர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *