உலகம்

ஈரானில் விழுந்த அமெரிக்க போர் விமானி மீட்பு; ஜனாதிபதி ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானால் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் வானூர்தியிலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, அதிரடி மீட்பு நடவடிக்கையின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் F-15E Strike Eagle வகை போர் வானூர்தி ஈரானிய வான்பரப்பில் வைத்து சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விமானி ஈரானின் மலைப்பாங்கான பகுதியில் தரையிறங்கிய நிலையில், அவரைத் தேடும் பணிகளை அமெரிக்க இராணுவம் 24 மணிநேரமும் தீவிரமாக முன்னெடுத்து வந்தது.

விமானியை மீட்கும் முயற்சியின் போது அமெரிக்க மீட்புப் படையினருக்கும் ஈரானிய தரப்பிற்கும் இடையே பாரிய துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட விமானி காயமடைந்துள்ள போதிலும், அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என ஜனாதிபதி ட்ரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, “எதிரி நாட்டு விமானியை” உயிருடன் பிடித்து ஒப்படைப்பவர்களுக்குப் பாரிய சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில், அமெரிக்கா இந்த மின்னல் வேக மீட்புப் பணியை முன்னெடுத்துள்ளது.

பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதலில், ஈரான் மண்ணில் விழுந்த முதல் அமெரிக்க வானூர்தி இதுவாகும்.

ஏற்கனவே மேலும் இரண்டு அமெரிக்க விமானங்களை தாம் சுட்டுவீழ்த்தியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ள போதிலும், தற்போதைய விமானி மீட்பு நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *