நேட்டோவில் இருந்து அமெரிக்கா விலகுமா ?…. ஈரானுடன் போரிடாத நேட்டோ ஒரு காகிதப் புலி!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

( இத்தாலி, ஸ்பெயின் ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. நேட்டோவிலிருந்து அமெரிக்காவின் பின்வாங்கல் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது)
நேட்டோ (NATO) அமைப்பில் இருந்து விலகுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார். நேட்டோ உறுப்பு நாடுகள் தங்களின் பாதுகாப்புப் பணிகளுக்குப் போதிய நிதி வழங்கவில்லை என்றும், ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் ஆதரவு அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள அவர், நேட்டோவை “காகிதப் புலி” என்றும் விமர்சித்துள்ளார்.
வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திணறும் ட்ரம்ப், நேட்டோ நாடுகளிடம் உதவி கேட்டு வந்தார். இருப்பினும், அவை உதவ மறுத்ததை அடுத்து, நேட்டோ மீது ட்ரம்ப் சீறிப் பாய்ந்துள்ளார். ஆனால் 2023இல் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) ஒப்புதல் அல்லது செனட் சபையின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாமல் அதிபர் தன்னிச்சையாக நேட்டோவிலிருந்து விலக முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்கா விலகினால் அது சர்வதேச அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.ஆனாலும் இதற்கு சட்ட ரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதால், இது உடனடியாக நடக்குமா என்பது கேள்விக்குறியே. அத்துடன் நேட்டோவிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது, ஐரோப்பாவின் வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியாக மாறும். ட்ரம்பின் இந்த மிரட்டலால் உலகளாவிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளதுடன், சர்வதேச அரசியல் சூழலே தலைகீழாக மாறும் சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேட்டோ உடையுமா ?
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோ, 30 ஐரோப்பியா நாடுகள் மற்றும் 2 வட அமெரிக்க நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இந்த அமைப்பு உருவானது. கூட்டு பாதுகாப்பை உறுதி செய்வது தான் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். இதன் உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.
உலக நாடுகளுக்குக் கூட்டு பாதுகாப்பை வழங்கவும் பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியம் மேலும் பரவாமல் இருக்கவும் உருவாக்கப்பட்டதே நேட்டோ.
நேட்டோவின் மிக முக்கிய உறுப்பினரான அமெரிக்கா தற்போதய சூழலில், அதில் இருந்து விலகவுள்ளதாக கூறியுள்ளமை பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு முதுகெலும்பாக விளங்கிய நேட்டோவிலிருந்து அமெரிக்கா விலகினால், ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது சாத்தியமற்றது என ஐரோப்பிய பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது “ஐரோப்பியப் பாதுகாப்புத் தூணை” (European pillar of defense) வலுப்படுத்தவும், அமெரிக்கா இன்றித் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் போர் ஒத்திகைகளை நடத்தவும் அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
நேட்டோ விரிவாக்கம் எதுவரை ?
1949 ஆரம்பத்தில் 12 உறுப்பு நாடுகளை கொண்ட நேட்டோவில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், டென்மார்க், பெல்ஜியம், நோர்வே, போர்த்துகல், நெதர்லாந்து, இத்தாலி, ஐஸ்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் போன்ற நாடுகள் இதில் இடம் பெற்றன. பின்னர் கிரேக்க தேசம், துருக்கி 1952இல் இணைந்தன. மேற்கு ஜெர்மனி 1955லும், ஸ்பெய்ன் 1982லும் இணைந்தன.
பனிப்போரின் முடிவில் வார்சோ ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. 1991ம் ஆண்டு வாரசோ ஒப்பந்தம் கலைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் நட்பு நாடுகளாக இருந்த செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து போன்ற நாடுகள், சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1999ல் நேட்டோவுடன் இணைந்தன.
இதன் பின்னர் பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா 2004ம் ஆண்டிலும், அல்பானியா, குரோசியா 2009ம் ஆண்டிலும் மோண்டேனேக்ரோ 2017ம் ஆண்டிலும், 2020ம் ஆண்டில் வடக்கு மசிடோனியாவும் நேட்டோவில் இணைந்தன.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் நேட்டோ விரிவாக்கத்தால்
புடினின் ஆட்சியின் கீழ் இருக்கும் ரஷ்யா தொடர்ந்து மேற்கு நாடுகள் மீதான அச்சத்தையும் சந்தேக பார்வையையும் எப்போதுமே கொண்டிருக்கிறது. ரஷ்யாவுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ள மூன்று பால்டிக் நாடுகளும் தற்போது நேட்டோ உறுப்பினர்களாக இருக்கின்றமை ரஷ்யாவின் பாதுகாப்பை அச்சுறுத்தலாக்கி உள்ளது.
நேட்டோ ஒரு காகிதப் புலி:
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நேட்டோ அமைப்பை ஒரு “காகிதப் புலி” (Paper Tiger) என விமர்சித்துள்ளதுடன், ஈரானுக்கு எதிரான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ போரில் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதே ட்ரம்பின் இந்த ஆத்திரத்திற்குக் காரணமாகும். நாங்கள் உதவி கேட்டபோது அவர்கள் நண்பர்களாக நடந்து கொள்ளவில்லை. எனவே நேட்டோவில் நீடிப்பது குறித்து நாங்கள் எடுக்கும் முடிவு வெறும் பரிசீலனை மட்டுமல்ல, அதற்கும் மேலானது என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு ஒரு ஆபத்து என்றால் நாங்கள் ஓடிச் சென்று பாதுகாக்கிறோம். ஆனால் எங்களுக்கு ஒரு தேவை வரும்போது தங்களின் ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அவர்கள் ‘இல்லை’ என்று சொல்கிறார்கள். இது ஒரு ஒருதலைப்பட்சமான உறவு என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ சாடியுள்ளார். அந்த அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் மார்கோ ரூபியோவும் ட்ரம்பின் கருத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்குத் தங்கள் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி மறுத்ததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திடீர் பின்வாங்கல் அறிவிப்பு ஐரோப்பிய நாடுகளை நிலைகுலையச் செய்துள்ளது.
ஐரோப்பிய கூட்டு பாதுகாப்பு முறிவு
வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு (NATO) ஏப்ரல் 4, 1949-ல் வாஷிங்டனில் கையெழுத்தான
ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்டது. உறுப்பு நாடுகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்தல் மற்றும் இராணுவ ரீதியாக ஒருவருக்கொருவர் உதவுதல் அவசியம் ஆகும். இதற்காகவே
நிறுவப்பட்ட வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒரு கூட்டு இராணுவக் கூட்டணியாகும். இது உறுப்பினர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது. பெல்ஜியத்தின் பிரசல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, தற்போது 32 உறுப்பு நாடுகளுடன் இயங்கி வருகிறது.
நேட்டோவின் கடந்த கால நடவடிக்கைகள் பல ரஷ்ய சார்பு நாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக சேர்பிய போரில் நேட்டோவின் பங்கு முக்கியமானது. நேட்டோவை மேலும் வலுப்படுத்த 2035-க்குள் உறுப்பினர்கள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5% பாதுகாப்பிற்காக முதலீடு செய்ய வேண்டும் என்ற இலக்கை அடைய அமெரிக்க அரசு வலியுறுத்துகிறது.
ஈரான் போரில் ஆதரவு தராத நேட்டோ

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் தொடர்ந்தும் ஹோர்முஸ் நீரிணையை மூடி உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நீரிணையை திறப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நேட்டோ நாடுகளின் உதவியை கோரியிருந்தார்.
இந்நிலையில் அவரது அழைப்பு நேரடியாகவே நேட்டோ நாடுகள் நிராகரித்த நிலையில், ட்ரம்ப் நேட்டோ நாடுகளை இவ்வாறு விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ வெறும் காகித புலி மட்டுமே. அணுசக்தி பலம் கொண்ட ஈரானை தடுக்கும் இது போரில் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்க மறுத்துவிட்டது. இதை குற்றச்சாட்டாக முன்வைக்கிறேன் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை இயல்பு நிலைக்கு திறக்க நேட்டோ உதவ முன்வரவில்லை. சிறிய ராணுவ தந்திர நடவடிக்கை மூலம் இதை சாத்தியம் செய்திருக்கலாம். அதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டது என குறை சொல்லி வருகின்றனர், அவர்கள் கோழைகள் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவிடம் கடற்படை கூட இல்லை. நீங்கள் மிகவும் பழமையாகிவிட்டீர்கள், என கடுமையாக ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
பிரித்தானியாவிடம் எப்போதும் நல்ல நட்பு பேணும் அமெரிக்க தற்போதைய சூழலில் கடுமையாக விமர்சித்துள்ளது. நான் ஒருபோதும் நேட்டோவால் ஈர்க்கப்படவில்லை. அவர்கள் ஒரு காகிதப்புலி என்பது எனக்கு எப்போதோ தெரியும், அது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் நன்கு தெரியும் எனவும் விமர்சித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல்களுக்குப் பிறகு, இந்த அமைப்பில் அமெரிக்கா உறுப்பினராக நீடிப்பது குறித்து மீண்டும் பரிசீலிப்பீர்களா எனக் வினவிய நிலையில், ஆம், அது மறுபரிசீலனைக்கும் அப்பாற்பட்டது என்று தாம் கருதுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தற்போது கூட்டறிக்கை வெளியிட்டன.
![]()