அறிவிக்கப்படாத மின்வெட்டும் நீர்வெட்டும்!; ஏற்கனவே அமுலில் உள்ளன – எதிர்க்கட்சிகள்

நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் நீர்வெட்டு ஏற்கனவே அமுலில் இருப்பதாக எதிர்க்கட்சிக் குழுவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, லசந்த அழகியவன்ன, வஜிர அபேவர்தன, முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர்.
“அறிவிக்கப்படாத மின்சாரத் தடைகள் மற்றும் நீர்வெட்டு ஏற்கனவே சில பகுதிகளில் அமுலில் உள்ளன” என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசாங்கம் கூறுவது போல் மின்வெட்டுக்கு மத்திய கிழக்குப் போர் காரணமல்ல என்றும், அரசாங்கத்தின் ஊழலே மின்சாரம் மற்றும் நீர்வெட்டுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார். மேலும், வெகுவிரைவில் மக்கள் உரத் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஜயசேகர குறிப்பிட்டார்.
நிலக்கரி கொள்வனவு மோசடியே மின்வெட்டுக்கும் மின்சாரக் கட்டண உயர்வுக்கும் காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்தார். “ஒரு தொன் 143 டொலர் என்ற அதிக விலைக்கு நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்டுள்ள நஷ்டம் 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்,” என்று அவர் கூறினார். இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் நிலக்கரி கப்பல்கள் வந்தாலும் மின்வெட்டு தவிர்க்க முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தை மூடிமறைப்பதற்காக, நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மொத்தக் கொள்ளளவில் 50 சதவீதமாகப் பேணப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும், எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கிய அவுஸ்திரேலியாவையும் அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றும் ரணவக்க கூறினார்.
“இலங்கை அரசாங்கமும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும்.” மின்சாரக் கட்டண உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு என மக்கள் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாதிக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
குறிப்பாக சிங்களப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு அனைத்துப் பேச்சாளர்களும் கோரிக்கை விடுத்தனர்.
![]()