இலங்கை

உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் சஜித் பங்கேற்றமைக்கு இம்ரான் மகரூப் அதிருப்தி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டமைக்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தனது கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இந்த நிகழ்வில் பங்கேற்றமை தன்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள இம்ரான் மகரூப், ஒரு மக்கள் பிரதிநிதியாக இதனை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது எனக் கூறியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவன் என்ற ரீதியில், கட்சியின் இந்த நகர்வை தனது ஆதரவாளர்களோ அல்லது பொதுமக்களோ எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

உதய கம்மன்பிலவினால் வெளியிடப்பட்ட குறித்த நூல் அரசியல் உள்நோக்கம் கொண்டது.

இவ்வாறானதொரு சர்ச்சைக்குரிய நிகழ்வில் கட்சித் தலைவர் பங்கேற்றது ஆரோக்கியமானதல்ல.

ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் அனைத்து இன, மத மக்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் கண்டறியப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் இச்செயற்பாடு அந்த எதிர்பார்ப்பிற்கு முரணானது.

“அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்படும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் எமது கட்சித் தலைவர் கலந்து கொண்டதை என்னால் ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது.” என இம்ரான் மகரூப் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *