தமிழ் மக்கள் இன்றும் திறந்தவெளிச் சிறையில்; சிறீதரன் எம்.பி.தெரிவிப்பு

தமிழ் மக்கள் இன்றும் ஒரு ‘திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள்’ வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு தொடர்ந்தும் இடம்பெற்றுவரும் நில ஆக்கிரமிப்பு முயற்சிகளே சான்றாகும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊர்வணிக்கன்பற்று கிராமத்தில், இராணுவத் தேவைக்காக முன்னெடுக்கப்படவிருந்த 25.73 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்:
பச்சிலைப்பள்ளி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், அவற்றை இராணுவத் தேவைகளுக்காக வலுக்கட்டாயமாக அளவீடு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தமது பூர்வீக நிலங்களை இழந்து நிற்கும் உரிமையாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் இணைந்து இந்த அநீதியான அளவீட்டுப் பணியைத் தடுத்து நிறுத்தினோம்.
தமிழ் மக்களின் பெரும்பான்மையான நிலப்பரப்புகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன. இன்றும் தமிழ் மக்கள் ஒரு ‘திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள்’ வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இத்தகைய நில ஆக்கிரமிப்பு முயற்சிகளே சான்றாகும். சொந்தக் காணி இல்லாமல், அருகில் உள்ள பள்ளமான பகுதிகளில் தற்காலிகமாக வசிக்கும் மக்கள், மழைக்காலங்களில் வெள்ள அனர்த்தத்தினால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை எமது ஜனநாயகப் போராட்டங்கள் தொடரும்,” எனத் தெரிவித்தார்.
![]()