அந்தகர் விழிப்பார் அருளொளி காண்பார்!…. கவிதை… ஜெயராமசர்மா

குருடும் குருடும் குருட்டாட்ட மாடினால்
திருட வந்தவன் திருப்தியாய் செல்வான்
குருடுகள் விழித்தால் குருட்டாட்டம் போனால்
திருட வந்தவன் மாட்டியே முழிப்பான்
அஞ்ஞானக் குருடர் ஆட்டம் போட்டால்
ஐம்புலத் திருடர் அனைத்தையும் திருடுவார்
அஞ்ஞானக் குருடர் விழித்துமே நின்றால்
ஐம்புலத் திருடர் அகப்பட்டுக் கொள்வார்
அகவிருள் சூழ்ந்தால் அனைவரும் குருடே
குருடாய் இருப்பது குறைபாடு அல்ல
குருடாய் இருப்பதை உணரா திருப்பதே
குறைபா டென்பதை உணருதல் வேண்டும்
மெஞ்ஞானம் அறியார் அஞ்ஞானி ஆவார்
அஞ்ஞானம் மிக்கார் அனைவரும் குருடே
அஞ்ஞானக் குருட்டு அகன்றுமே போக
ஆண்டவன் அருளே அரு மருந்தாகும்
ஆண்டவன் அருளால் ஐம்புலத் திருடர்
அடங்குவார் ஒடுங்குவார் அகன்றுமே ஓடுவார்
அந்தகர் விழிப்பார் அருளொளி காண்பார்
அஞ்ஞானம் அகலும் மெஞ்ஞானம் மிளிரும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()