இலங்கை

இயக்கச்சியில் 17 பேரின் 25.73 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு எதிராக மக்கள் போராட்டம்;  நில அளவீடு இடை நிறுத்தம் 

கிளிநொச்சி பச்சிளைப்பள்ளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இயக்கச்சியில் உள்ள நான்காவது இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள காணி 17 பொது மக்களுக்கு சொந்தமான நிலையில் அந்தக் காணியை இராணுவ முகாமுக்கு சுவீகரிக்கும் அரசின் முயற்சியை எதிர்த்து பொது மக்களால் நேற்று வியாழக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காணியுரிமையாளர்கள் இராணுவம் மற்றும் ஆளும்தரப்புக்கும் எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை இராணுவத்தின் 4 ஆவது பட்டாலியன் படைப்பிரிவின், மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி அமைப்பதற்காக 25.73 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் இந்த நில அளவை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசாங்க நில அளவையாளரால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின்படி, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் நேற்று காலை 9 மணியளவில் பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன.

இதன் தொடர்ச்சியாக பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்தி குழு தலைவர்மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தநில அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை இழக்க நேரிடும் என்று கூறி குறித்த நில அளவீட்டு பணியினைதற்காலிகமாக இடை நிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டது இதனை தொடர்ந்துகுறித்த மக்கள் போராட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் கரைச்சிபிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூகசெயற்பாட்டாளர்கள் காணியுரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *