மக்களால் தாங்க முடியாதளவுக்கு புத்தாண்டுப் பரிசுகள் வருகிறது; அரசு வழங்கக் காத்திருக்கின்றது என்கிறார் ராஜித

புத்தாண்டில் இன்னும் பல பரிசுகளை வழங்குவதற்கு அரசாங்கம் காத்திருக்கின்றது என்றும், அந்த பரிசுகள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ராஜித சேனாரட்ன இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மின்சாரக் கட்டணம் தற்போது 10.5 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எரிபொருள் விலைகள், உணவுப் பொருட்களின் வழரவகட மற்றும் நீர்க் கட்டணம் என்பன அதிகரிக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் மாற்றுவதாக கூறி வந்தவர் இந்த புத்தாண்டில் இன்னும் பரிசுகளை கொடுப்பார். தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு பரிசுகளை கொடுப்பார்.
மின் கட்டணம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தரமற்ற நிலக்கரியே காரணமாகும். இதனால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை நுகர்வோர் மீது சுமைகளை சுமத்தாமல் ஈடு செய்ய முடியாது. இதன்படியே மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு அனுமதி வழங்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் எவ்வளவு பாதிப்புகள் இயந்திரங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த திருடர்களை ஜனாதிபதி பாதுகாக்கின்றார். இந்த நிலைமையால் டீசலால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
இப்போது மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் வீதி மின் விளக்குகளை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மக்கள் நடமாட்டம் இருக்கும் நேரத்தில் இவ்வாறு மின் விளக்குகளை அணைத்தால் என்னவாகும். எதிர்காலத்தில் நீர்வெட்டும் அமுல்படுத்தப்படலாம். ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இங்கு போன்று அதிக வரியும் கிடையாது.
இந்த நேரத்தில் மக்களின் பொறுமையின் எல்லை இந்த புத்தாண்டு காலத்தில் முடிவுக்கு வரலாம். இதனால் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அனைனவரும் மக்களுக்கு தலைமைத்துவம் வழங்க தயாராக வேண்டும் என்றார்.
![]()