இலங்கை

கஜேந்திரகுமாரின் கட்சியை தவிர வட, கிழக்கில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் ஒரு குடையின் வரும்!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன.இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்தால் வடக்கு,கிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் கஜேந்திரகுமாரின் கட்சியை தவிர அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்து விடுவார்கள் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவராக தந்தை செல்வாவின் 128ஆவது ஜனனதினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு கிளையின் தலைவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வருமான சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றபோது இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,இ.சிறிநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சாணக்கியன் எம்.பி. மேலும் பேசுகையில்,

ஒரு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் தமிழ் மக்களின் கைகளில் இருந்தால் மாத்திரம்தான் எமது நிலத்தினை நாங்கள் பாதுகாக்கமுடியும்.இல்லாதுவிட்டால் எங்காவது காணிகளை பாதுகாக்க ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தே தடுக்கவேண்டிய நிலையிருக்கின்றது.

நாங்கள் மாகாணசபை தேர்தலை தொடர்ந்து வலியுறுத்திவருவதற்கான முக்கிய காரணம்.மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் ஆளுநரின் ஆளுகைக்குள் இல்லாமல் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களின் கீழ் மாகாணசபை இருக்கும்.உள்ளுராட்சிமன்றங்களை இயங்கவைப்பதற்கு ஆளுநரோ மாகாணசபையோ தடையாக இருக்காது.அதற்காகவே மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம்.

உடனடியாக பறிக்கக் கூடிய பழமாக மாகாணசபையும் ஏணிவைத்து ஏறி நாங்கள் பறிக்கக்கூடிய பழமாக புதிய அரசியலமைப்பு இருக்கும்.அதனை நாங்கள் முன்னெடுப்போம்.மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதாக இருந்தால் நாங்கள் எங்களது நீண்டகால இலக்கான புதிய அரசியலமைப்பினை அடைந்தால் மாத்திரம்தான் அதனை செய்யமுடியும்.

ஒற்றுமையை பற்றி பேசும்போது இலங்கைதமிழரசுக்கட்சி உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தனித்துபோட்டியிடவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் உறுதியாகயிருந்தார்கள்.வட்டாரங்களில் பங்காளிக்கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்காத நிலைமைகள் காணப்பட்டன,தவிசாளர்,பிரதி தவிசாளர்கள் பங்காளிக்கட்சிக்கு விட்டுக்கொடுக்கமுடியாத நிலைமைகள் காணப்பட்டன.பிரிந்துகேட்டபோதும் வடக்கில் பல இடங்களில் இணைந்து ஆட்சியமைத்தோம்.

இன்று ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறுகின்ற சிலர் மறுபுறத்தல் இவர்தான் ஒட்டுக்குழுக்களை இணைக்கின்றார்,இவர்தான் மீண்டும் ஒட்டுக்குழுக்களுடன் பயணிக்கப்பார்க்கின்றார் என்று கூறிவருகின்றனர்.தங்களுக்கு தங்களுக்கு தேவைவரும்போது சேர்ந்து இயங்கவேண்டும்,தங்களுக்கு தேவையில்லாதபோது சேர்ந்து செயற்படக்கூடாது.பங்காளிக்கட்சிகளுக்கு எதுவும் வழங்ககூடாது,ஆனால் ஒற்றுமையாக பயணிக்கவேண்டும்.இதுவே சிலரது செயற்பாடாகவுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் இலங்கை தமிழரசுக்கட்சியும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர்.இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தையில் ஒருஇணக்கப்பாட்டுக்குவந்தால் வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் கஜேந்திரகுமாரின் கட்சியை தவிர அனைவரும் ஒரு குடையின் கீழ் வந்து விடுவார்கள் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *