சுறுசுறுப்பாக இயங்கிய ஜப்பான்!… விறுவிறுப்பாக தொடர்ந்த பயணம்!!… தொடர் – 01 …. சங்கர சுப்பிரமணியன்


தமிழுக்கும் ஜப்பானுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை எனது வாசிப்பு அனுபவம் எனக்கு தெளிவு படுத்தியது. சுசுமு ஓனோ என்ற ஜப்பான் நாட்டு மொழியியலாளர் எடுத்து வைத்த கருத்து என்னை வியப்படைய வைத்தது. தமிழ் மொழி உலக மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி என்பது ஒரு புறமிருக்க அதிலிருந்து பல மொழிகள் தோன்றி இருப்பதாய் சொல்லப்படுவதையும் நம்பும்படி அவர் எடுத்து வைக்கும் கருத்தில் ஆழமிருக்கிறது.
ஜப்பானிய மொழியில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ் எழுத்துக்களில் காணப்படும் வளைவும் சுழிவும் ஓரளவில் ஜப்பானிய மொழியிலும் இருக்கிறது. அதற்காக தமிழ்மொழிக் குடும்பத்தில் ஜப்பானிய மொழி இருப்பதாகச் சொல்லவில்லை. உடனே மாடசாமி அண்ணாச்சி தமிழ்மொழிக் குடும்பமா? திராவிடமொழிக் குடும்பம் என்றல்லவா சொல்கிறார்கள் என்கிறார்.
நம்மில் சிலர் அன்னமும் ஆகாரமும் இங்கு ஆசையும் பாசமும் அங்கு என்றிருப்பதைக் காணமுடிகிறதல்லவா? நாங்கள் தமிழர்கள்தான் ஆனால் எங்களுக்கும் கேரளாவுக்கும் தொடர்புள்ளது. நாங்கள் மலையாளிகளைப் போல புட்டும் இடியாப்பமும் சாப்பிடுகிறோம் என்று எனது நண்பர்கள் பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்.
நான் அவர்களிடம் நீங்கள் அவர்களைப்போல் நிறமுடையவர்களாக இல்லையே தமிழரைப் போன்றுதானே இருக்கிறீர்கள் என்பேன். மலையாளிகள் உளுந்து வடையும் பருப்புவடையும் எங்களைப் போலவே சாப்பிடுகிறார்கள். அவியலும் பொரியலும் எங்களைப்போலவே செய்கிறார்கள் அதனால் நாங்களும் மலையாளிகள் மாதிரிதான் என்று நான் ஒருநாளும் சொல்லமாட்டேன். காரணம் தமிழன் என்று சொல்வதைத்தான் பெருமை என நான் எண்ணுகிறேன் என்பேன்.
தங்களை தமிழர்கள் என்று சொல்வதை பெருமையாக உணராதவர்கள் நாங்கள் அதிகம் மலையாளப் படங்களை மட்டுமே பார்ப்போம் என்று ஒருநாளும் என்னிடம் சொன்னதில்லை. தமிழ்ப்படங்களைத்தான் பார்ப்பார்கள். நாங்கள் தேவாரம் திருவாசகம் எல்லாம் படிக்கமாட்டோம் என்றோ திருக்குறள், கம்பராமாயாணம் படிக்க மாட்டோம் என்றோ சொன்னதில்லை. அவற்றைத்தான் படிப்பார்கள். ஆனால் தங்களை நாங்கள் மலையாளிகள் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் அப்படியொரு பெருமை.
தம்மைத் தமிழராக உணராதவர்களால் மட்டுமே திராவிடமொழிக் குடும்பம் என்ற மாயை உள்ளது. தமிழ்மொழிக்கு மூலம் என்ன என்றால் முதனிலைத் திராவிட மொழி என்கிறார்கள். இவர்களைத் தவிர, இதைச் சொல்பவர்கள் தமிழர் அல்லாதவர்களும் ராபர்ட் கால்டுவெல் சொன்னதை சிரமேற்பவர்களும்தான். உண்மையில் அது முதனிலைத் தமிழ்மொழி.
முதனிலைத் திராவிடமொழி என்பது சில மொழியியலாளர்களால் செய்யப்பட்ட மீளுருவாக்கம் மட்டுமே. இதனை வரலாற்றுச் சான்றுகள் மூலம் நிறுவமுடியாது. எனவே இதனை மீண்டும் மீளுருவாக்கம் செய்யவேண்டும்.
மீளுருவாக்கம் செய்யமுடியுமா? முடியும், முடியாதது என்று ஒன்றுமில்லை. அதற்கு தமிழரிடம் நாம் அனைவரும் தமிழரே என்ற மனநிலை உருவாக வேண்டும். ஆனால் கேரளாவுக்கும் எங்களுக்கும் தொடர்புள்ளது கர்னாடகாவுக்கும் எங்களுக்கும் தொடர்புள்ளது மற்றும் ஆந்திராவுக்கும் எங்களுக்கும் தொடர்புள்ளது என்று சொல்லிக்கொண்டு தமிழரைத் தமிழரே உணராமல் இருக்கிறார்களே?
எங்கள் வீட்டில் பிஸிபேளேபாத்தும் ஒப்பிட்டும் செய்வோம் என்பதால் கன்னடன் ஆகிவிடுவேனா அல்லது ஒரு கன்னடர் வீட்டில் இட்லிசாம்பாரும் செட்டிநாடு காரக்குழம்பும் செய்வதால் தமிழர் ஆகிவிடுவார்களா? அதற்கு பல காரணங்கள் உள்ளன. எந்த கன்னடராவது எங்களுக்கும் தமிழருக்கும் தொடர்புள்ளது என்று சொல்கிறார்களா? சொல்லமாட்டார்கள்.
எந்த மலையாளியும் தெலுங்கரும் அதேபோல் சொல்லமாட்டார்கள். வரலாற்றில் உண்மை
இருப்பினும் சொல்லமாட்டார்கள். அதுதான் அவர்களது மொழிப்பற்று. காலச்சுழற்சி மாறும். தமிழர் தம் வரலாற்றை உணர்வர். முதனிலைத் திராவிடமொழி என்பது மீளுருவாக்கம் செய்யப்படும்.
இதை ஏன் இவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறேன் என்றால் வரலாறு கற்றுக் கொடுத்ததை வைத்தே சொல்கிறேன். எந்த வரலாறு சொல்லிக் கொடுத்தது? சான்றுகள் உள்ளதா என்று நீங்கள் நினைப்பதில் தவறில்லை. எந்த திருமால் பக்தரிடமாவது சென்று கேட்டுப்பாருங்கள். உலகம் உருண்டையா தட்டையா என்று. நொடி கூடத் தாமதிக்காமல் உருண்டை என்பார்.
உலகை பாய்போல சுருட்டி கடலுக்கடியில் ஓளிந்திருந்த அசுரனிடமிருந்து மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பாய்போல சுருட்டிய உலகை மீட்டாரே நீங்கள் உருண்டை என்கிறீர்களே என்றால் அது அந்தகாலத்து கதை, எந்த காலத்தில் இருக்கிறீர்கள் என்று உங்களுக்கு சரியான பதிலைச் சொல்வார்.
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்று திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டாரே, நீங்கள் திருக்குறளெல்லால் படித்ததில்லையா? என்ன வாசிப்பு அனுபவமோ? போங்கள் என்பார். பொழுது போக்காக பொழுதுபோக்குக்காக புனையப்பட்ட ஒரு நவீனத்தை எடுத்துக் கொண்டு அதில் வரும் நிகழ்வையும் அதில் பங்குபெற்ற பாத்திரத்தையும் வைத்து வாசிப்பு அனுபவம் என்றால் அதுவும் பொழுது போக்காய்த்தான் முடியும் என்பார்.
உடனே மாடசாமி அண்ணாச்சி என்னை முறைத்துப் பார்க்கிறார். அண்ணாச்சி நான் எல்லோரையும் சொல்லவில்லை, ஆக்கபூர்வமான வாசிப்பு அனுபவப் பகிர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன என்று கூறினேன். அவருக்கு ஒரு கதையையும் சொன்னேன். கோழி திருடிய கதை ஒன்று அரசவைக்கு வருகிறது. கோழியை பறிகொடுத்தவர் திருடியதாக சந்தேகப்பட்ட சிலரை நிற்க வைத்திருந்தார்.
தீர்ப்பு வழங்கவேண்டிய அரசர் எப்படியெப்படி எல்லாமோ விசாரித்தும் பலன் கிட்டவில்லை. இறுதியில் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். நான் கோழியைத் திருடியவரை கண்டுபிடித்து விட்டேன் என்றார். கோழியைத் திருடியவரின் தலையில் கோழியின் மயிர் இருக்கிறது என்றார். சற்றும் இதை எதிர்பாராத உண்மைக் குற்றவாறி தன்னையறியாமல் கோழியின் மயிர் தன் தலையில் ஒட்டி இருக்கிறதா என்று தடவிப்பார்த்தார்.
இதைக் கண்ட அரசர் அவரிடம் விசாரணையைத் தொடங்க திருடியவர் குற்றத்தை ஒப்புக் கொண்டாராம் என்ற அவரிடம் சொன்னேன். உண்மையை உணர்ந்த அவர் என்னை முறைத்துப் பார்த்தது தவறு என்று உணர்ந்தார். மீண்டும் கட்டுரைக்கே வருகிறேன். தமிழராய் திருவள்ளுவர் சொன்னால் ஏற்கமாட்டீர்கள்.
ஆனால் மேல் நாட்டவர்களான அறிவியல் மூலமாக பைலாலோஸ் மற்றும் அரிஸ்டாடிலும்
தொலைதோக்கி மூலம் கலிலியோவும் மீளுருவாக்கம் செய்து உறுதிப்படுத்தி விட்டாரே என்பார் அந்த திருமால் பக்தர். இதை வைத்துதான் சொல்கிறேன். அசுரன் பாயாக சுருட்டி கடலுக்கடியில் வைத்து திருமால் கண்டுபிடித்த பூமியை தட்டை என்றே நம்பி வந்தோம்.
கடவுளுக்கும் அசுரனுக்கும் தெரியாதிருந்த ஒன்றை மனிதர்கள் கண்டு பிடித்துவிட்டனர். இதேபோல் அணுகும் முறையில் வரலாற்றைச் சான்றுகளுடன் அணுகி தமிழ்மொழிதான் தமிழுக்கு முந்தைய முதனிலைத் தமிழ்மொழி என்று மீளுருவாக்கம் செய்ய முடியும். இப்போது சொல்லப்பட்டு வரும் முதனிலைத் திராவிட மொழியை மீளுருவாக்கம் செய்ய ஏகப்பட்ட வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.
(தொடரும்….)
![]()