நிலமிசை நீடுவாழ்வார் யார்?….. சங்கர சுப்பிரமணியன்


நீடுவாழ்வார் என்றால் என்ன? மார்க்கண்டேயன் போல் என்றும் பதினாறு வயதாக வாழ்வதா? அப்படி வாழத்தான் முடியுமா? அவருக்கு ஏதோ ஜாக்பாட் அடித்தது வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாம் எல்லோரும் நினைப்பதுபோல் இத்த கலிகாலத்தில் அப்படி ஒரு ஜாக்பாட் அடிக்குமா? அப்படி இருந்தால் இங்கு நம் கண் முன்னே ஏகப்பட்ட மார்க்கண்டேயன்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
ஆதலால் நீடுவாழ்வார் என்றால் நோய்நொடி இன்றி உடல் நலத்துடன் கவலையில்லாது வாழும்நாள் வரை வாழ்வதாகும். யாரும் நம்மை நீடுழி வாழ்க என்றால் மார்க்கண்டேயன் போல் வாழ்வாய் என்று பொருள் அல்லவே.
ஆதலால் இவ்வாறு நிலமிசை நீடுவாழ்வார் யார் என்பதை அறிவோம். மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார் என்கிறார் வள்ளுவர். மாணடி சேர்ந்தார் என்றால் என்ன? மாணடியை அடைதல் என்பதாகும். சான்றாக இறைவனடி சேர்ந்தார் என்றார் என்றால் இறைவனடியை அடைந்தார் என்றே பொருள்.
எப்படி இயற்கையாக ஆண் பெண் இனச் சேர்க்கையால் மனிதன் இயற்கையாக பிறந்தானோ அப்படியே வாழ்ந்து முடித்தவுடன் இயற்கையிலேயே கலந்தான் என்பதே கருப்பொருள். இனி யாருடைய மாணடியை சேர்ந்தார் என பார்ப்போம். அவர் யாருமல்ல மலர்மிசை ஏகினான்தான்.
மலர்மிசை ஏகினான் என்றால் மலர் மீது செல்லுதல், நடத்தல் அல்லது போதல் என்று பொருள். மலர்மீது நடந்து போகமுடியுமா?
போகமுடியும். உங்களைப் போன்றோரும் என்னைப் போன்றோரும் போகமுடியாது. அதிலும் ஐம்பது வயதில் என்பது கிலோ எடையைச் சுமந்து திரிபவர்களாலும் போகமுடியாது.
ஆனாலும் போகமுடியாது என்று திட்டவட்டமாய் சொல்லமுடியாது. ஏனென்றால் தாமரை மலரில் உட்காரவும் நிற்கவும் இயலும்போது ஏன் நடந்து போக முடியாது. அப்படி அமர்ந்தவர்கள் நின்றவர்களைப்பற்றி என்னால் சொல்ல முடியும். உட்கார்ந்து இருப்பவர்கள் பிரம்மாவும் சரஸ்வதியும் ஆவார்கள். நிற்பவரோ லட்சுமி.
இவர்கள் எல்லாம் இருந்ததும் நின்றதும் அந்தக்காலத்தில் என்பவர்களுக்கு அவர்களது காலத்திலேயே மலர்கள் மீது நடக்கக் கூடியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதையும் ஏற்க வேண்டும். இருப்பதும் நிற்பதும் சாத்தியம் என்றால் நடப்பதும் சாத்தியமே. லட்சுமியும் சரசுவதியும் நீரின் மேல் இருந்த மலர்கள் மேல்தான் நின்றார்கள் அமர்ந்தார்கள்.
ஆனால் நம் பிரம்மா, திருமாலின் தொப்புள் கொடியில் இருந்து தோன்றிய தாமரை மலரில் அமர்ந்திருக்கிறார். இதனால் என்ன தெரிகிறது? மலர் மீது அமரலாம் மற்றும் நிற்கலாம் என்று தெரிகிறது. கடவுள் செய்வதைத்தான் நாமும் செய்கிறோம். கடவுள் காதலிக்கிறார். சான்றாக முருகன் வள்ளியைக் காதலித்தார். கண்ணன் ராதாவைக் காதலித்தார்.

கடவுளர் திருமணம் செய்தனர். திருமால் மற்றும் லட்சுமி, சரசுவதி மற்றும் பிரம்மா மற்றும் சிவன், பார்வதியைச் சொல்லலாம். பிள்ளைகள் பெற்றனர். சிவன் மற்றும் ராமன் போன்றோர் குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
ஆகவே அவர்கள் செய்தவற்றை எல்லாம் நம்மாலும் செய்யமுடியும். அவர்கள் வாழ்ந்து மறைந்தவர்கள் என்பது ஒன்றே வேறுபாடு.
இப்போது மலர்மிசை ஏகுதலைப் பற்றிப் பார்ப்போம். மலர்மீது நடக்க முடியுமா? முடியும். அதற்கான பயிற்சையை எடுத்துக் கொண்டால் நடக்க முடியும். சித்தர்கள் போன்றோர் காற்றிலும் நீரிலும் நடப்பவர்கள் என்பதை படித்து அறிகிறோம். அது எப்படி முடியும்? அபிராமி பட்டர் அமாவாசையில் முழுநிலவை வரவழைத்தார் என்று நம்புகின்றோம். அதைப்போல் இதையும் நம்பலாம்.
நடக்க முடியும் என்பதற்கு சான்றைக் கூறுகின்றேன். ஒரு திடப்பொருள் திரவத்தில் மூழ்கிவிடும். ஒரு கிலோ எடையுள்ள திடப்பொருளை தண்ணீரில் போடும்போது மூழ்கிவிடும். ஆனால் பல டன் எடையுடைய கப்பல் மிதக்கிறதே. இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு திடப்பொருள் தன் நிலையை மாற்றிக் கொள்ளும்பொது தண்ணீரில் மிதக்கிறது என்பது தெரிய வருகிறது.
இன்னொன்றையும் உங்களுக்கு சொல்கிறேன். மட்பாண்டத்தின் உடைந்த துண்டு இரண்டினை ஒரு நாணயத்தின் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஏரி அல்லது குளத்தில் அதன் மேற்பகுதியில் நீர் சலனமற்று இருக்கும்போது உங்களிடமுள்ள ஒரு மட்பாண்ட துண்டைப் போடுங்கள். அது மூழ்கிவிடும்.
உங்களிடமிருக்கும் மற்றொரு துண்டை தண்ணீரின் மேற்பரப்பை தொட்டுச் செல்லுமாறு ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சாய்வாக அதே சமயத்தில் வேகமாக வீசுங்கள். இப்போது அந்த மட்பாண்டத் துண்டு என்ன ஆகும். உடனே தண்ணீரில் மூழ்காது. தவளையைப் போன்று தண்ணீரின் மேற்பரப்பில் தத்தித்தத்திச் செல்லும். நீங்கள் எவ்வளவு வேகமாக வீசுகிறீர்களோ அதற்கேற்ப அது தத்திச் செல்லும்.
அந்த மட்பாண்டத் துண்டு வேகமாக வீசியதால் ஏற்பட்ட விசையை இழந்தவுடன் நீரில் மூழ்கிவிடும். இதைப் போன்றே தங்களது உடையின் எடை மற்றும் பயிற்சியின் மூலம் காற்றிலும் நீரிலும் நடக்கக்கூடிய வல்லமை பெறும்போது அவர்களால் மலர்கள் மீதும் நடந்து சென்றிருக்க முடியும். இத்தகைய சித்தர்களைத்தான் வள்ளுவர் மலரடி ஏகினான் என்கிறார்.
இத்தகைய சித்தர்களின் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் என்கிறார் வள்ளுவர். இங்கு மாணடி சேர்ந்தார் என்றால் சித்தர்களின் காலில் விழுதலைப் பற்றிச் சொல்லவில்லை. அவர்களின் வாழ்வியல் முறையைப் பின்பற்றுதலையே சொல்லியிருக்கிறார். நோகாமல் நோம்பிருப்பது போல் சிலர் காலில் விழுந்தே காரியத்தைச சாதித்து விடலாம் என்று சொல்லவில்லை.

இப்போது குறளின் பொருளுக்கு வருவோம். மலர்மீது நடந்து செல்லக்கூடிய வல்லமை மிக்க சித்தர்களின் வாழ்வியல் முறையைப் பின்பற்றுபவர்கள் இம்மண்ணில் நீண்ட நாட்கள் நலமுடன் இருப்பார்கள் என்பதே பொருளாகும். அதற்காக சித்தர்களைப் போன்று மலர்மீது நடந்து செல்லும்வகையில் கடும் பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அவர்கள் சொல்லிச் சென்ற நல்வழிகளைப் பின்பற்றினால் வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம். அப்படிப்பட்ட சித்தர்களை எங்கு சென்று தேடுவது? எங்கும் சென்று தேட வேண்டாம். உள்ளங்கை நெல்லிக் கனியாக திருக்குறள் என்ற நூலை நமக்கு அருளிச் சென்றிருக்கிறார் சித்தர் திருவள்ளுவர். சுயவிளம்பரமாக நான் திருக்குறளை எழுதியிருக்கிறேன் படியிங்கள் எனச் சொல்லவில்லை.
எரிந்து போக இருந்த அறிவுக் கருவூலமான வாழ்வியல் நூலை மாந்தர்களே தேடித்தேடி படிக்கிறார்கள். எனவே திருக்குறளைக் கற்று அதன் வழி நிற்பவர்கள் நிலமிசை நீடு வாழ்வர் என்றறிவோம்.
![]()