இலங்கை

முதல் அனுபவத்தால் சர்வதேச ரீதியில் புதிய சர்ச்சைகளில் சிக்குவதைத் தவிர்க்க அரசாங்கம் கடும் முயற்சி

காலி கடற்பரப்பிற்கு அப்பால் மார்ச் 4 ஆம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலின் டொர்பிடோ (torpedo) தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ்.டெனா’ விவகாரத்தில், நடுநிலைமையைப் பேணவும், சர்வதேச ரீதியில் புதிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

இந்திய கடற்படையின் பிரதான பன்முகக் கடற்படைப் பயிற்சியான ‘MILAN 2026’ இல் (பெப்ரவரி 15 முதல் 25 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது) பங்கேற்ற பின்னர், இலங்கை அதிகாரிகளின் அழைப்பின் பேரில் ஈரானியக் கப்பல்கள் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்ததாக ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் கடந்த திங்கட்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரசாங்கம் இது குறித்து மேலதிக கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்த்து வருவதாக ‘சண்டே ரைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

“இது(ஐ.ஆர்.ஐ.எஸ்.டெனா) போருக்காக இங்கு வரவில்லை. இந்தியாவில் அமைதியான பயிற்சியில் பங்கேற்றது. இந்தியாவில் இருந்தபோது, இந்தக் கப்பலும் மற்ற இரு கப்பல்களும் இலங்கை அரசாங்கத்தினால் இங்கு வருமாறு அழைக்கப்பட்டன. அவர்கள் அழைப்பின் பேரிலேயே இங்கு வந்தனர். அமெரிக்காவிடம் இருந்து அவர்களுக்கு முன்கூட்டியே எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை,” என தூதுவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், ஈரானியக் கப்பல்கள் திரும்பு வழியில் கொழும்புக்கு வருவதற்கு முறையான அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என சிரேஷ்ட அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் ‘எஸ்.எல்.என்.எஸ்.சாகர’ மற்றும் ‘ எஸ்.எல்.என்.எஸ்.நந்திமித்ர’ ஆகிய இரு கப்பல்களும் இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதியின் அழைப்பின் பேரில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவுடன் அந்தப் பயிற்சியில் கலந்துகொண்டதாக அவர்கள் கூறினர். இந்தப் பயணத்தின் போது, கடற்படைத் தளபதி ஈரானியப் பிரதிநிதிகள் உட்பட ஏனைய நாட்டுப் பிரதிநிதிகளுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதன்போது, ஒரு மரியாதை நிமித்தமாக கொழும்புத் துறைமுகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

“இவ்வாறான அழைப்புகள் வழக்கமாக விடுக்கப்பட்டாலும், கப்பல்கள் இங்கு நங்கூரமிடுவதற்கு முறையான அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. வெளிநாட்டுக் கப்பல்கள் வருகை தருவதற்கான அனுமதி பெறுவதற்கு குறைந்தது 14 நாட்கள் ஆகும், ஏனெனில் அவை வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் ஊடாகச் செல்ல வேண்டும். எனவே, இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும் அவசரமாகச் செய்ய முடியாது,” என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, அதாவது பெப்ரவரி 26 ஆம் திகதியே, மார்ச் 9 முதல் 13 வரை ஈரானியக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு ஈரானிய அதிகாரிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். ஐ.ஆர்.ஐ.எஸ்.டெனா’ மூழ்கடிக்கப்பட்ட போது, அரசாங்கம் அந்தக் கோரிக்கையை பரிசீலித்துக் கொண்டிருந்தது.

கொழும்பிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் இது குறித்து விளக்கமளித்தார்.

இந்த நிலையில் ஈரானியத் தூதுவரின் கூற்றுக்கள் குறித்து விவாதத்தில் ஈடுபட அரசாங்கம் உத்தியோகபூர்வமாக மறுத்துவிட்டது. இந்த வார அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார்.இதன் மூலம் சர்வதேச ரீதியில் புதிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வதைத் அரசு தவிர்த்து வருகிறது.

இதற்கிடையில், இலங்கையில் தங்கியுள்ள ஏனைய 251 ஈரானிய மாலுமிகளின் நிலை குறித்து தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வருகின்றது. அவர்களைத் திருப்பி அனுப்புவது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஈரானிய தூதுவர் தெரிவித்தார். எனினும், சர்வதேச ரீதியாக வகுக்கப்பட்டுள்ள விதிகளுக்கு அமைவாகவும், சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படியும் அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கை கையாளப்படும் என அரசாங்கம் கூறுகிறது.

ஈரானியக் கப்பல்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் இருந்தபோதிலும், மீட்கப்பட்ட மாலுமிகளுக்கு வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்காக ஈரானிய தூதுவர் இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். “தற்போது அவர்கள் இங்கு உள்ளனர். இலங்கை அரசாங்கம் மிகவும் விருந்தோம்பல் மிக்கது. எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்களை விரைவில் அவர்களது குடும்பத்தினருடன் சேர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

இலங்கை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஈரான் உதவும் என்றும் தூதுவர் டெல்கோஷ் உறுதியளித்தார். “இலங்கை போன்ற நட்பு நாடுகளுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க ஈரான் எப்போதும் தயாராக உள்ளது. இலங்கை எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் பொருட்களைக் கோரினால், ஈரான் அவற்றை வழங்கும். இலங்கை சிரமப்படுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

ஈரானியத் தூதுவரின் இந்த முன்மொழிவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் ஜயதிஸ்ஸ, எண்ணெயைக் கொண்டு வருவதற்குத் தேவையான கப்பல்கள் இலங்கையிடம் இல்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்து அத்துடன் அந்த விவகாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *