இலங்கை

’’நோட்டீஸ் ஒட்டினால் வெடி விழும்’’: அருச்சுனா மிரட்டல்: கடும் அமளிதுமளி

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் காணிக்குச் சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டச் சென்றால் “வெடி விழும்” என அவர் மிரட்டியதால், அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பைக் கருதி நோட்டீஸ் ஒட்டவில்லை என மானிப்பாய் பிரதேச சபைத் தவிசாளர் க.ஜெசீதன் தெரிவித்த கருத்தால் சபையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே இந்த விவகாரம் சூடுபிடித்தது. பெரியவிளான் பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவிற்குச் சொந்தமான காணி பற்றைகள் வளர்ந்து காடாகக் காணப்படுவதால், அங்கிருந்து பாம்புகள் வெளியேறி அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்துக் கடந்த சபை அமர்வில் உறுப்பினர் எட்வேட் மரியவாசினி சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த காணிக்குச் சிவப்பு எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்படும் எனத் தவிசாளர் உறுதியளித்திருந்த போதிலும், அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை என உறுப்பினர் அச்சுதபாயன் கேள்வி எழுப்பினார்.

“பெண்களை அவதூறாகப் பேசும் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் காணிக்கு ஏன் இன்னும் நோட்டீஸ் ஒட்டவில்லை? அந்த நோட்டீஸை எங்களிடம் தந்திருந்தால் நாங்களே ஒட்டியிருப்போம். ஏன் இந்தத் தாமதம்?” என உறுப்பினர் அச்சுதபாயன் கேள்வி எழுப்பினார்.

“நோட்டீஸ் ஒட்டுவது என்பது ஒரு அடையாளம் மட்டுமே. ஆனால், நாம் இது குறித்துச் சபையில் பேசிய விடயம் ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே வலுவாகச் சென்றடைந்துள்ளது. அந்தப் பிரதிநிதி தனது சமூக வலைத்தளத்தில், ‘நோட்டீஸ் ஒட்ட வருபவர்களுக்கு வெடி விழும்’ என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அரச உத்தியோகத்தர்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்களின் உயிரைப் பணயம் வைத்து எதனையும் செய்ய முடியாது.” என தவிசாளர் க.ஜெசீதன் விளக்கமளித்துள்ளார்.

பெரியவிளான் வட்டார உறுப்பினர் எட்வேட் மரியவாசினி பேசுகையில்,

பாராளுமன்ற உறுப்பினருக்குச் சாதகமாக தவிசாளர் செயல்படுகிறாரா எனக் கேள்வி எழுப்பியதுடன், சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உப தவிசாளர் சுதாகர் இந்த விவகாரத்தில் தமக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததையும் கடுமையாகச் சாடினார்.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் குறித்த காணியை உடனடியாகச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியபோது, ஏனைய உறுப்பினர்களும் தவிசாளரின் மெத்தனப் போக்கிற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *