இலங்கை

ரெலோ தலைமை உடன் பதவி விலக வேண்டும்!; வலியுறுத்தி திருமலையில் ஆர்ப்பாட்டம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்சியின் 12 ஆவது தேசிய மகாநாட்டை உடனடியாக நடத்தி, புதிய நிர்வாகிகளை தெரிவு செய்யுமாறு வலியுறுத்தியும், வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கட்சியின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த கட்சி அங்கத்தவர்கள், பின்னர் அங்கிருந்து நடைபவனியாக திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கத்திற்கு முன்பாக சென்று அங்கு தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “தலைமை குழுவே! தேசிய மகாநாட்டை உடன் நடத்து”.

“தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிக் காத்த கட்சியை சீரழிக்காதே!”

“ஆயுதம் ஏந்தி போராடி இரத்தம் சிந்தி, ஜனநாயக ரீதியில் அரசியல் செய்தமையா நாங்கள் செய்த குற்றம்?”

“தலைமைக்குழுவினரே! நீங்கள் ஜனநாயக விரோதிகள்!”

“கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே,ரெலோவை அழிக்காதே””தலைமைக்குழு உறுப்பினர்களே, பதவி ஆசைக்கா ஆயுதம் தூக்கினீர்””பதவி ஆசை போதும். சாகுவரை நீங்களா?”

“ரெலோ தலைமைக்குழுவே! பதவி விலகுங்கள்! மகாநாட்டை நடத்துங்கள்!ஜனநாயகத்தை மதியுங்கள்”

“கட்சித் தலைமையே! கட்சிக்கு எதிராக வழக்கு போட்டமை,வேறு எங்கும் நடந்துள்ளதா!” என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்சியின் யாப்பு விதியின்படி தற்போதுள்ள தலைவர் உட்பட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 23.03.2026 அன்று முடிவடைந்துள்ளது. எனவே உடனடியாக கட்சியின் 12 ஆவது தேசிய மகாநாடு கூட்டப்படல் வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ் கவனீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டதாக,போராட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கௌரிதாஸ் பத்மலோஜினி என்ற கட்சியின் மூத்த உறுப்பினர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *