மயக்கமுற்ற மாணவனுக்கு வைத்தியரில்லாததால் சிகிச்சையளிக்க மறுத்த பிரதேச வைத்தியசாலை!

திடீரென மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலைப் பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது எனத் தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வியாழக்கிழமை (26) யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவனொருவன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்துக் அந்த மாணவன் அருகிலுள்ள பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தற்போது வைத்தியர் இல்லை எனவும், இரண்டு மணிக்குப் பின்னரே வருகை தருவார் எனவும் வைத்தியசாலை ஊழியரொருவர் தெரிவித்துள்ளார்.
மாணவனின் நிலையை கருதி தாதியரொருவரை முதலுதவிச் சிகிச்சை வழங்குமாறு ஆசிரியரொருவர் கேட்ட நிலையில் மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தம் மீது பொறுப்பாகிவிடும், செய்ய மாட்டோமென மறுத்துள்ளனர்.
மாணவனை வேறு வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்கு அனுப்புவதற்கு அம்புலன்ஸ் வண்டி ஒழுங்கு செய்து தாருங்கள் எனக் கேட்ட நிலையில் அதுவும் தம்மிடமில்லை எனவும் வேறு அம்புலன்ஸ் வண்டிகளும் இங்கு வராதெனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வேறு வழியின்றி மயக்கமடைந்த மாணவன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![]()