தமிழக அரசியல் சுவாரஸ்யமாகின்றதா?…. நியூசிலாந்து சிற்சபேசன்


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ளது. தொகுதி ஒதுக்கீடுகள் நடைபெறுகின்றன. அதனால், கட்சித் தலைவர்கள் பம்பரமாகச் சுழல்கின்றனர். தேர்தலில் போட்டியிட விரும்புகின்றோர் ‘திக் திக்” கணங்களை அனுபவிக்கின்றனர்.
திமுக கூட்டணி, அண்ணா திமுகவுடன் பாரதிய ஜனதாக் கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜய்யின் தவெக என நான்கு தரப்புக்கள் தேர்தலிலே போட்டியிடுகின்றன. மேலதிகமாக, பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாசும், சசிகலாவும் இணைந்து மேலுமொரு கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டாலே சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமில்லை. ஒருபுறம், அரசியல்வாதிகளின் கூட்டு, உடைவு, கட்சிதாவல் என காட்சிகள் விரிகின்றன. மறுவளத்தில், பிரமாண்டமான பொதுக்கூட்டங்களும், “ரோட்ஷோ”க்களும் கண்கவர் காட்சிகளாகின்றன.
பெருந்தலைகள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்கள் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்படுகின்றன. அதற்காக, விசாலமான இடங்கள் தெரிவு செய்யப்படுகின்றன.
சனத்திரளுக்கு நடுவே கட்சித்தலைவர் நடந்து செல்வதற்கு, “ரேம்ப் வாக்” என்று சொல்லக் கூடிய, உயரமான “நடைமேடை” அமைக்கப்படுகிறது. அதனூடாக, மக்களை நோக்கித் தலைவர் வருவதுபோன்ற அமைப்பு உருவாக்கப்படுகின்றது. அதனால், சனத்திரளிடையே தலைவரினால் லாவகமாகச் செல்லமுடிகின்றது. அவ்வாறாகவே, தலைவர் நெருங்கி வருவதுபோன்ற ஓர் உணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. மிகக் கிட்டிய தூரத்தில் தலைவரைக் கண்டதும் சாமானியர் குஷியாகின்றனர். அதேவேளையில், யாரேனும் தலைவரை நெருங்க முற்பட்டால், “பவுன்சர்”களினால் துவம்சம் செய்யப்படுகின்றனர்.

ஒருகாலத்திலே, அழகிப்போட்டி – “பேஷன் ஷோ” க்களிலேயே “ரேம்ப் வாக்” முறை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதிலே, பெண்கள் ஒய்யாரமாக நடந்து வருவது போன்று காட்சிகள் அமைக்கப்படுவதுண்டு. அத்தகைய, “ரேம்ப் வாக்”கையே அரசியல் மேடைகளிலும் இப்போது காணமுடிகின்றது. அதிலே தலைவர்கள் ஒய்யார நடை பயில்கின்றனர்.
மறுவளத்தில், சாமானியர்கள் அமரக்கூடிய பகுதிகள் பாதுகாப்பானதாக அமைக்கப்படுகின்றன. சுமார் ஐநூறுபேர் அமரக்கூடியதாக தனித்தனி பகுதிகள் உருவாக்கப்படுகின்றன. தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. அதன்மூலமாக, நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது.
மேலதிகமாக, யாருமே பசி அல்லது தண்ணீர் தாகத்தால் அவதிப்படாத அளவுக்கு கவனிக்கப்படுகின்றனர். பிரியாணி, குடிதண்ணீர், நொறுக்குத் தீனி போன்றவை பொதிசெய்யப்பட்டுக் கூட்டம் ஆரம்பமாக முன்னரே ஆசனங்களிலே வைக்கப்படுகின்றன. போதியளவு வாகனத்தரிப்பிட வசதியும் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இத்தகைய, பிரமாண்டமான அரசியல்கூட்டக் கலாச்சாரத்தை ஆரம்பித்த முன்னோடிகளில், பாட்டாளி மக்கள் கட்சியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வண்டலூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மகாநாடு புதுமைகளின் ஆரம்பமாகியது. தலைவருக்கான “ரேம்ப் வாக்” மேடை, அதிலே நடந்துகொண்டே பேசுகின்ற அமைப்பு, சட்டையிலேயே போட்டுக்கொள்ளக்கூடிய “காலர் மைக்” என பல்வேறு வியக்கவைக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகின.
முன்னொரு காலத்தில், பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் ஒற்றை மைக் வைத்து கூட்டம் நடாத்தினார்கள். அதன்பின்னர், நான்கைந்து பெஞ்சுகளை சீரான வரிசையாக்கி அரசியல் மேடை தயாராகியது. அதுவே காலவோட்டத்தில், பிரத்தியேகமேடை அமைக்கும் கலாசாரமாகியது.
அதனுடைய தொடர்ச்சியாகவே, பிரமாண்டமான மேடை, “ரேம்ப் வாக்”, சட்டையிலே பொருத்தக்கூடிய “காலர் மைக்” என்று இன்றையகாலகட்ட அரசியல்மேடை கலகலப்பாக ஆகியுள்ளது.
ஒருகாலகட்டத்திலே, வாகனங்களுக்கு மேலே ஏறிநின்று மட்டுமே பேசினார்கள்.
இன்று தேர்தல் பிரசாரத்துக்கு பிரத்தியேக வாகனங்களே தயாரிக்கப்படுகின்றன. அதிலே இருந்துகொண்டு பேசலாம், வாகனத்தின் உட்பகுதியிலிருந்தே “லிப்ட்” மூலமாக வாகனத்தின் மேற்பகுதிவரை வெளியே வந்து பேசலாம் என ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் பிரத்தியேகமாக வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. அத்தகைய வாகனங்களிலே, ஓய்வுக்கு படுக்கை – உணவு உண்ணக்கூடிய ஏற்பாடு – கழிப்பறை என ஏகப்பட்ட வசதிகளும் உருவாக்கப்படுகின்றன.
அத்தோடு “ரோட்ஷோ”க்களும் நடாத்தப்படுகின்றன. அதன்போது, விசாலமான வாகனத்திலே நின்றுகொண்டோ அல்லது அமர்ந்துகொண்டோ தலைவர் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படுகின்றது. தெருவோரங்களிலே சாமானியர்கள் நிறுத்திவைக்கப்படுகின்றனர். வாகனத்திலே தலைவரைக் காணும்போது ஆரவாரிக்கின்றனர்.
இவ்வாறான பாணியிலேயே, மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, விஜய், மோடி என வெவ்வேறு தலைவர்களும் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூரிலே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12வது மாநில மாநாடு, மார்ச் 9ல் நடைபெற்றது.

அண்மையிலே நடைபெற்ற பிரமாண்டமான பிரச்சாரக்கூட்டங்களிலே அதுவும் ஒன்றாகும்.
சுமார் ஐநூறு ஏக்கர் பரப்பளவில், இருபது இலட்சம் சதுர அடிக்கு அரங்குகளும், மூன்று இலட்சம் வரையானவர்கள் அமர்வதற்கும், ஏழு இலட்சம் வரையானோர் நின்று பார்க்கக்கூடிய வகையிலும் மாநாட்டுத் திடல் அமைக்கப்பட்டிருந்தது.
உணவு, குடிநீர், வாகனத் தரிப்பிடம் என ஒவ்வொரு ஏற்பாடும் பார்த்துப்பார்த்துச் செய்யப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகின்றது.
கழகக் கொடியை ஏற்றுவதற்காக, நூறுஅடி உயரமான, பிரம்மாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.
‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ போன்ற மகுடவாசகங்கள் மகாநாட்டின் கருப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டன.
மகாநாட்டுக்குத் திரண்ட தொண்டர்களின் கூட்டத்தால், சிறுகனூர் அமைந்துள்ள திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை, மக்கள் மற்றும் வாகனக் கடலாகக் காட்சியளித்ததாகவே வர்ணிக்கப்பட்டது.
இவ்வாறாக, ஒரு “கார்ப்பரேட்” (செழுமையான வர்த்தக) நிறுவனத்தின் பிரத்தியேகக் கூட்டம் போன்று புதுமை, கவர்ச்சி, பாவனையளர்களுக்கான வசதி என தமிழகத்தின் அரசியல் கூட்டங்கள் மாற்றமடைந்திருக்கின்றன. “ரேம்ப் வாக்”கில் தலைவர்கள் ஒய்யார நடை நடக்கின்றனர். இப்படியான விடயங்களே தமிழக அரசியலை சுவாரஸ்யமாக்குகின்றன.
![]()