முச்சந்தி
ஈரானை சிதைக்க மொசாட் சதித் திட்டம்… டெஹ்ரானில் ஆட்சி கவிழ்ப்பு தோல்வி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், ஈரானுக்குள் மக்கள் எழுச்சியைத் தூண்டி அதன் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட் (Mossad) தீட்டிய ரகசியத் திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்தும் அதே சதித் திட்டம் தான் இங்கும் அரங்கேற்றப்பட்டது. மொசாட் தீட்டிய அதே பழைய திட்டம் புதிய களமான தெஹ்ரானில் திட்டமிடப்பட்ட குழப்பம் படுதோல்வி அடைந்துள்ளது.
தோல்வியில் மொசாட் கனவு:

ஈரான் நாட்டின் பொருளாதாரத்தை முடக்கி, மக்களை வாழ முடியாத நிலைக்குத் தள்ளுவதன் மூலமாக பொருளாதார நெருக்கடியால் மக்கள் எழுச்சி பெற்று போராடுவார்கள் என அமெரிக்கா எதிர்பார்த்தது. ஈரான் மக்கள் தங்களின் சொந்த அரசுக்கு எதிராக வீதிக்கு வரும்படி தூண்டிய மொசாட் தீட்டிய சதித் திட்டம் தற்போது படுதோல்வி அடைந்துள்ளது.
ஆபிரிக்க, அரேபிய நாடுகளில் நடைபெறும் ஆட்சி மாற்ற – சதித் திட்டத்தை ஜனநாயகப் போராட்டம் (Pro-democracy protests) என மேற்கு உலக ஊடகங்கள் சித்தரிப்பது வழமையாகும். ஜனநாயக முகமூடி அணிந்த இந்த அரசுகள் தற்போது மொசாட்டின் பெரிய பொய்க்கும் இதே போர்வையை வழங்கியுள்ளன.
ஈரான் இப்போது வீழ்வதற்குத் தயாராக உள்ளது. ஒரு சிறிய தூண்டுதல் இருந்தால் போதும் மக்கள் ஆட்சியைத் தூக்கியெறிந்து விடுவார்கள் என்ற சமீபத்திய மொசாட் உளவுத்துறை அறிக்கைகளின்படி அதன் தலைவர் டேவிட் பார்னியா (David Barnea) டிரம்ப் மற்றும் நெதன்யாகுவிடம் உறுதியளித்திருந்தார். இந்தத் தவறான கணிப்பின் அடிப்படையில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகப் போரில் உடனடியாக இறங்கியது.
மேற்கத்திய ஊடகங்கள் ஈரானில் பெரும் புரட்சி வெடிப்பது போல செய்திகளை வெளியிட்டாலும், களத்தில் நிலைமை வேறாகவே இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
ஈரான் மக்கள் ஒற்றுமை:
இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் தீவிரம் அடைந்த நிலையில் உள்ளது.
விடுதலை என்று கூறிக் கொண்டு ஒரு நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கும் இவர்களின் தந்திரங்களை ஈரான் தனது ராணுவ பலத்தாலும், மக்களின் உறுதியாலும் முறியடித்து வருகிறது. ஜனநாயகம் என்கிற போர்வையில் ஒரு நாட்டைச் சிதைக்க நினைக்கும் இவர்களின் அழுக்கு அரசியல் இதுவரை ஈரானிடம் எடுபடவில்லை என தற்போது இஸ்ரேலுக்கு புரிந்துள்ளது.
பெப்ரவரி 28 முதல் அமெரிக்க- இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களால் ஈரானில் 3500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் குறைந்தது 300 குழந்தைகளாக உள்ளனர்.
அமெரிக்க- இஸ்ரேல் சேர்ந்து தாக்குதல் நடத்துவதால், பகிரங்க எச்சரிக்கை விடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்துகின்றது. அடிக்கு அடி, பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கியுள்ளது. இதனை வளைகுடாவின் இறுதி யுத்தமாக சிலர் பார்க்கின்றனர். மத்திய கிழக்கில் ஆரம்பித்த போர் தற்போது முடிவுக்கு வருமா என்பது சந்தேகமே.
இந்த போரில் ஈரான் தோல்வியில் விழுந்தால் அது ஈரானுக்கு மட்டுமான தோல்வியல்ல ரஸ்யாவிற்கான தோல்வி மற்றும் சீனாவிற்குமான தோல்வியாக முடியும் என ஊகிக்கப்படுகிறது. இதேவேளை மேற்கத்திய நாடுகள் தாங்கள் பொருளாதார ரீதியாக விழும் போது வளைகுடா நாடுகளும் விழ வேண்டும் என்று சிந்திப்பதை போல் உள்ளது.

தெஹ்ரானில் திட்டமிடப்பட்ட ஆட்சி கவிழவில்லை. மொசாட் எதிர்பார்த்தது போல ஈரானிய அரசு சரிந்து விடவில்லை. மாறாக முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் பதில் தாக்குதல்களை ஈரான் நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்க இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுக்கு எதிராக ஈரானிய மக்கள் தங்களின் அரசுக்கு பின்னால் அணி திரண்டுள்ளனர்.
போர்க் காலத்தில் ஈரான் மக்கள் ஒற்றுமைப்பட்டுள்ளமை போல தெரிகிறது. தெஹ்ரானில் மக்கள் புரட்சி ஏற்படாததால் ஏமாற்றமடைந்த நெதன்யாகு அரசு தற்போது மொசாட் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோ டாலர் பொருளாதாரம்:
மேற்கு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, வளைகுடாவில் குவைத் மற்றும் பஹ்ரைன் போன்ற சிறிய வர்த்தக இராஜ்ஜியங்களை உருவாக்கி, பின்னர் ஈரான் என்ற பெயரில் ஒரு கற்பனையான எதிரியை உருவாக்கி வைத்துள்ளது. அவர்களிடம் கண்சாய் எண்ணெயை அமெரிக்க டாலரில் விற்கச் சொல்கின்றன. அதற்கு ஈடாக நாங்கள் உங்களைப் பாதுகாப்போம் என்றும் கூறுகின்றது.
உண்மையான கணிப்புகளில் அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே சரிவை நோக்கி செல்கிறது. ஆசிய நாடுகளைப் போல அது சரிந்துவிடாமல் இருப்பதற்கு ஒரே காரணம் பெட்ரோ டாலர்தான். மேலும் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தயாரிப்பு ஆயுதங்களையும் அமெரிக்க டாலரில் வாங்குமாறு மற்றய நாடுகளிடம் கோரிக்கை வைத்து வருகிறது.
அமெரிக்காவின் பார்வையில் இது ஒரு தந்திரமான செயல்.
முக்கியமாக மற்ற நாடுகள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து வாங்க வேண்டிய எண்ணெயை அமெரிக்க டாலரில் வாங்குவதன் மூலம், உலகின் பிற நாடுகள் அமெரிக்காவின் கடனை அடைக்கின்றன என்பதே உண்மையாகும். எண்ணெயை போதுமான நாடுகள் வாங்கத் தயாராக இருப்பதால், அமெரிக்க அரசால் அதிக டாலர்களை அச்சிடவோ அல்லது வைப்பில் சேர்க்கவோ முடியும்.
இஸ்ரேலிய அணு சக்தி தளம் மீது தாக்குதல்:
தெற்கு இஸ்ரேலின் டிமோனா மற்றும் அராட் நகரங்களை ஈரான் ஏவுகணை மூலம் தாக்கியுள்ளது. டிமோனாவில் இஸ்ரேலின் முக்கிய அணு சக்தி தளம் அமைந்துள்ளதால் இந்த தாக்குதல் புது அச்சத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு இஸ்ரேல் தொடுத்த தாக்குதலே பதிலடி என்று ஈரான் கூறுகிறது.
ஈரானின் இந்த தாக்குதில் இஸ்ரேலில் குறைந்தது 180 பேர் காயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. அராட் மற்றும் டிமோனாவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அராட் (Arad) நகரில் 116 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். இந்நகர மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. டிமோனாவில் (Dimona) 64 பேர் காயமடைந்து உள்ளனர்.

ஈரானின் இந்த திடீர் தாக்குதல் மற்றும் பாதிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து இதை “கடினமான இரவு” என்று இஸ்ரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை சர்வதேச நாடுகளுடன் இணைந்து தொடருவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
அண்மைய ஈரானின் ஏவுகணை தாக்குதலின் போது இஸ்ரேலின் அயன் டோம் (Iron Dome) வான்பாதுகாப்பு அமைப்புகள் இயக்கப்பட்டன. ஆனால் சில ஏவுகணைகள் தடுக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இது இஸ்ரேல் வான்பாதுகாப்பு தோல்வியா என சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரான் நடான்ஸ் அணு வசதி மீது தாக்குதல்
ஈரான் தனது நடான்ஸ் அணு செறிவூட்டல் (Natanz nuclear enrichment complex) வசதி மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. ஆனால் கதிரியக்க கசிவு இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தான் அராட் (Arad) மற்றும் டிமோனாவில் (Dimona) தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. நடான்ஸ் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பல்ல என்று மறுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் இது குறித்து முழு அறிக்கையை இதுவரையில வெளியிடவில்லை. அமெரிக்க தரப்பிலும் இதுகுறித்து விளக்கம் கொடுக்கவில்லை.
தெஹ்ரான் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்கியுள்ளது. தெஹ்ரானில் உள்ள மாலெக் அஷ்தார் பல்கலைக் கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தாக்கியதாக அறிவித்தது. இந்த மையம் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.

ஈரான் அணு ஆயுதம் பெற அனுமதிக்க மாட்டோம் என்று இஸ்ரேல் ராணுவம் உறுதியளித்தது. ஆனால் இந்த தாக்குதல்கள் போரை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளன. ஆம் முதல் கட்டமாக ஈரான் தலைவர்கள் மற்றும் அவர்களது இருப்பிடம் மட்டுமே தாக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்கள் மீது ஈரான் – இஸ்ரேல் தாக்குதல் நடத்தின.
இந்த நிலையில் தற்போது இரு நாடுகளும் அணு சக்தி தளங்களை குறிவைத்து தாக்க துவங்கியுள்ளன. ஈரானில் Natanz, இஸ்ரேலில் Dimona பகுதிகளில் தாக்குதல்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இரு தரப்பும் அணு வசதிகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்களுக்கு இது பொருளாதாரம், எரிசக்தி விலை உயர்வு, பாதுகாப்பு அச்சம் போன்றவற்றை தாண்டி புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

![]()