முச்சந்தி

எரிபொருள் விலை அதிகரிப்பு மூலம் கறுப்புச் சந்தை சூதாட்டத்தில் அரசு

அரசாங்கம் மேற்கொண்டுள்ள அசாதாரண எரிபொருள் விலை அதிகரிப்பானது, மக்களைத் துன்புறுத்தி முன்னெடுக்கப்படும் ஒரு “கறுப்புச் சந்தை சூதாட்டம்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது,

அரசாங்கம் குறைந்த விலைக்குக் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் கையிருப்புகளைத் தேக்கி வைத்துவிட்டு, தற்போது புதிய விலையின் கீழ் அதனை விற்பனை செய்து பாரிய இலாபம் ஈட்டுகின்றது. இது திட்டமிட்ட ஒரு கொள்ளையாகும்.

கடந்த சனிக்கிழமையன்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மூடி வைத்ததன் நோக்கம், குறைந்த விலையிலான எரிபொருள் விநியோகத்தை முடக்குவதே ஆகும்.

அந்தப் பழைய கையிருப்பை வைத்துக்கொண்டே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விலையை அதிகரித்துள்ளனர். இது நுகர்வோரை வஞ்சிக்கும் செயலாகும்.

கடந்த காலங்களில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேடைகளில் பேசிய பேச்சுக்களுக்கும், இன்றைய அவரது செயல்பாடுகளுக்கும் எந்தவித தொடர்புமில்லை. இன்று அவர் ஒரு கறுப்புச் சந்தை முதலாளியைப் போலவே செயற்படுகின்றார்.

ஒரே மாட்டை இரண்டு முறை தோல் உரிப்பதைப் போன்றதொரு மோசமான செயலை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது. தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, மக்களைப் படுகுழியில் தள்ளியுள்ள இந்த அரசாங்கத்தின் போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *