உலகம்

அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் மீது ஏவப்பட்ட 100 ஏவுகணைகள்; இஸ்ரேல் , குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் 

உலகின் மிகப்பெரிய போர்க் கப்பல்களில் ஒன்றான யு.எஸ்.எஸ்.ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி கப்பலைத் தாக்கப் போவதாக ஈரான் சூளுரைத்துள்ளது. முன்னதாக நடத்தப்பட்ட ஒரு பாரிய ஏவுகணைத் தாக்குதல் இலக்கைத் தவறவிட்ட நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘ஒபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கைக்கு ஆதரவாக அரபிக் கடலில் நிறுத்தப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கன் கப்பலை நோக்கி, ஈரான் கடற்கரையிலிருந்து ஏவுகணைகளை ஏவும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்:

“அவர்கள் உலகின் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான எங்களது விமானம் தாங்கி கப்பல் மீது 100 ஏவுகணைகளை வீசினார்கள். உண்மையில், ஏவப்பட்ட 101 ஏவுகணைகளும் இடைமறித்து அழிக்கப்பட்டன,” என்று கூறினார்.

இந்த நிலையில் மத்திய கிழக்கு போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்த உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ். ஜெரால்ட் ஆர். ஃபோர்ட் (USS Gerald R. Ford), திங்களன்று கிரீட் தீவில் உள்ள சூடா பே கடற்படைத் தளத்திற்கு வந்தடைந்தது. பெப்ரவரி மாத இறுதியில், ஃபோர்ட் மற்றும் ஆபிரகாம் லிங்கன் ஆகிய இரு விமானம் தாங்கிக் கப்பல்களை உள்ளடக்கிய பாரிய இராணுவக் குவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கின.

தற்போது, யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பல், தங்களது ஏவுகணை எல்லைக்குள் வந்தால் அதைத் தாக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. பாரிய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்த போதிலும், ஈரான் பின்வாங்கவில்லை.

ஈரானிய கடற்படைத் தளபதி ஷஹ்ரம் இரானி கூறுகையில், ” யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் கப்பல் ஈரானின் தொடர்ச்சியான கண்காணிப்பில் உள்ளது. அது ஏவுகணை அமைப்புகளின் வரம்பிற்குள் வந்தவுடன் தாக்கப்படும்,” என்று எச்சரித்தார்.

இதற்கிடையில் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (Revolutionary Guards), இஸ்ரேல் மீதும், குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஏவுதளங்களாகச் செயல்படும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தனது பழிவாங்கும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.

குவைத்: குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தொட்டி மீது ட்ரோன்கள் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ‘குறைந்தபட்ச’ சேதம் ஏற்பட்டுள்ளதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பஹ்ரைன்: பஹ்ரைனில் வான்வழித் தாக்குதலுக்கான அபாய எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டன.

ஜோர்டான்: தலைநகர் அம்மான் அருகே ஏவுகணைச் சிதறல்கள் விழுந்ததாக ஜோர்டான் பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதில் உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை.

சவுதி அரேபியா: நாட்டின் கிழக்குப் பகுதியில் குறைந்தது நான்கு ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *