முச்சந்தி

ரஷ்யா – அமெரிக்கா இடையே நெருக்கடி… ஈரானுக்கு பிறகு கியூபா என டிரம்ப் மிரட்டல்!…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(கியூபாவை மையப்படுத்தி ரஷ்யா – அமெரிக்கா இடையே மேலுமொரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஈரானுக்கு பிறகு கியூபா என டிரம்ப் மிரட்டல் விடுத்ததுள்ளார். கரீபீயன் நாட்டை அமெரிக்க கையகப்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது)

இந்த ஆண்டு ஜனவரி முதல் கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இதனால் 9.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட கியூபா, அமெரிக்கா விதித்துள்ள எண்ணெய்த் தடையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் கியூபாவின் எரிசக்திக் கட்டமைப்பு பெரும்பாலும் செயலிழந்துவிட்டது. மக்கள் தினமும் சுமார் இருபது மணி நேரம் வரை மின் தடையில் அவதிப்படுகின்றனர்.

நட்பாக கையகப்படுத்துதல்:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கியூபா தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும், அந்நாட்டை அமெரிக்கா ஒரு “நட்பு ரீதியிலான கையகப்படுத்துதல்” (Friendly Takeover) மூலம் தன்வசப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

கியூபா ஒரு பலவீனமான நாடாக மாறிவிட்டதாகவும், அந்நாட்டை விடுவிப்பது அல்லது கையகப்படுத்துவது குறித்து தம்மால் எதையும் செய்ய முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் கியூபாவை மையப்படுத்தி வலுக்கும் பதற்றத்திற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கியூபாவுடன் முரண்பட வேண்டாம்

கியூபாவை கைப்பற்ற நினைத்து கூட பார்க்க வேண்டாம் என்று டிரம்பை புட்டின் எச்சரித்துள்ளார். ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம் என்றும், கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறியுள்ளமை, கியூபாவை சொந்தமாக நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நாடு கியூபா. பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பின் தற்போது அந்நாட்டை மிகேல் டையஸ் கெனல் கியூபாவை ஆண்டு வருகிறார். இந்நிலையில்தான் கியூபாவை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.

கியூபா ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும், அதன் சுதந்திரத்திற்கு ரஷ்யா எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் இத்தகைய அழுத்தங்களுக்கு எதிராக கியூபாவிற்கு தேவையான அனைத்து அரசியல் மற்றும் ராஜதந்திர ஆதரவையும் வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஜனாதிபதி டிரம்பின் இந்த பேச்சுக்களை கடுமையாக விமர்சித்து மிரட்டல் என்று விமர்சித்துள்ளார்.

கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு

கரீபியன் நாடான கியூபா வெனிசுலா நாட்டிடமிருந்து எரிபொருளை வாங்கி வந்தது. ஆனால், வெனிசுலா அதிபரை சமீபத்தில் அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், கியூபா தங்களிடம் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என அமெரிக்கா கூறியது.
ஆனால், கியூபா அதை கேட்கவில்லை. எனவே, கியூபாவுக்கு எரிபொருள் வழங்கும் நாடுகளுக்கு அதிக அளவு வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததால் கியூபாவிற்கு எரிபொருள் செல்வது தடுக்கப்பட்டது.

கியூபாவின் மின் உற்பத்தியில் 70 சதவீதம் எரிபொருள் சார்ந்தது என்பதால் மின் உற்பத்தி தடைபட்டது. இதையடுத்து, அந்நாடு இருளில் மூழ்கி இருக்கிறது. தற்போது கியூபாவில் நிலவும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத் தடைக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கியூபா விவகாரத்தை கவனித்து வருவதாகவும், அந்த அரசு விரைவில் வீழும் என்றும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்து வருகிறது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.

கியூபா மீதான பொருளாதாரத் தடை:

பனிப்போர் காலத்தில் பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிக்குப் பிறகு அமெரிக்காவுடனான உறவு துண்டிக்கப்பட்டது. ஆனாலும் பராக் ஒபாமா காலத்தில் உறவைச் சீராக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால், டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் கியூபா மீது மீண்டும் கடுமையான தடைகளை மீண்டும் விதித்தார்.

2020 முதல் கியூபா கடும் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளது. வரலாற்று ரீதியாகவே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே சுமுகமான உறவு ஒருபோதும் இருந்ததில்லை. இன்று கியூபா தனது பொருளாதார எண்ணெய் தேவைக்காக வெனிசுலாவைச் சார்ந்துள்ளது. மேலும் சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து முதலீடுகளைப் பெற்று வருகிறது. இன்றைய நிலையில் வெனிசுலாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், கியூபா ரஷ்யாவுடம் மீண்டும் உதவியை நாடியுள்ளது.

இரண்டாவது பதவிக்காலத்திலும் டிரம்ப் கியூபா மீது கடும் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து வருகிறார். மேலும் குறிப்பாக கியூபாவின் பொருளாதாரத் தூணான சுற்றுலாத் துறையை அவர் குறிவைத்துள்ளார்.

வெனிசுலாவில் மதுரோவின் கைதால் கியூபா பொருளாதாரம் மேலும் சிதையும் என்றும், அது வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கியூபாவை அமெரிக்கா கைப்பற்றுமா ?

இதேவேளை டொனால்ட் டிரம்ப் கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி இரண்டுமே ஒரே மாதிரியான விளைவு தான் என்று அவர் தெரிவித்துள்ளார். என்னால் அந்த தீவை எதுவும் செய்ய முடியும். கியூபாவை கைப்பற்றும் கௌரவம் எனக்கு வேண்டும் என மிகப் பெருமிதமாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே கிரீன்லாந்தை நாங்கள் கைப்பற்றுவோம் என கூறியிருந்த அமெரிக்காவின் அடுத்த இலக்கு கியூபா என்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ளார். கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம். கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்குப் பிறகு கியூபா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் கியூபாவைக் கைப்பற்றும் பெருமை தமக்குக் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். ஈரானுக்குப் பிறகு கியூபா மீதான நடவடிக்கையை எடுப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

கியூபாவை நட்பார்ந்த முறையில் கைப்பற்றுவது பற்றி அந்நாட்டு அதிகாரிகளுடன் தமது நிர்வாகம் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரானுடனான போர் தணிந்ததும் கியூபா பக்கம் திரும்பவிருப்பதாக அமெரிக்க அதிபர் கூறியமை குறித்து ரஷ்ய அதிபர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனாலும் எவ்வாறு கியூபாவை கைப்பற்றவிருக்கிறார் என்பது பற்றிய விவரங்களை டிரம்ப் வெளியிட மறுத்துவிட்டார். கியூபா தற்போது மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கிறது. அதை எப்படி வேண்டுமென்றாலும் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற டிரம்ப் பேச்சை பல சர்வதேச நாடுகள் கடுமையாக விமர்சித்து உள்ளன.

அமெரிக்கா – கியூபா உறவு:

2025இல் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவிக்கு வந்த பின் கியூபாவுடன் பதற்றங்கள் மேலும் வலுப்பெற்றது. கடந்த சில பத்தாண்டுகளில், இரு நாடுகளும் பதற்றமான, பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட உறவையே கொண்டிருந்தன. இதில் சில நல்ல காலகட்டங்களும் சில மோசமான காலகட்டங்களும் இருந்தன. ஆனால் தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு பிடல் காஸ்ட்ரோவின் சோசலிச புரட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, அமெரிக்கா, கியூபா இடையிலான உறவு மோசமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டுகளில், சிஐஏ ஆதரவுடனான படையெடுப்பு, அணு ஆயுதப் போர் அபாயம் மற்றும் பல புலம்பெயர்வு நெருக்கடிகள் ஏற்பட்டன. பல தலைமுறை கியூபர்களும் அமெரிக்கர்களும் இந்த அரசியல் விரோதத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த மோதல் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.

டிரம்ப் அரசு 1960களில் இருந்து நிலவி வரும் பொருளாதாரத் தடையை இன்னும் கடுமையாக்கியது. கியூபாவின் பல பிரச்னைகளுக்கு இந்தத் தடையே காரணம் என்று அந்நாடு கூறுகிறது. பிற நாடுகளில் இருந்து கியூபா எரிபொருள் பெறுவதைக் கடினமாக்கும் நடவடிக்கைகளையும் டிரம்பின் அரசாங்கம் மேலும் கடுமையாக எடுத்தது.

இது கியூபாவின் எரிசக்தி, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை மேலும் மோசமாக்கியது. அந்தத் தீவு ஏற்கெனவே துன்பத்தில் இருந்தது. மேலும் ஜனவரி தொடக்கத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையில் நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் ஆதரவு முழுமையாக குறைந்தது. இதுவும் கியூபாவின் நிலையை மேலும் மோசமாக்கியது என்பதை மறுக்க முடியாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *