இலங்கை

கையிருப்பிலிருந்த எரிபொருளுக்கே விலை அதிகரிப்பு; 70,000 கோடி ரூபா வரை அரசாங்கத்துக்கு லாபம்!; மக்கள் வீதிக்கு இறங்கும் நிலை வரும்

வெளிநாடுகளிலிருந்து புதிதாக எரிபொருட்களை இறக்குமதி செய்யாது, கையிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே அரசாங்கம் விலை அதிகரித்துள்ளதனால் அரசாங்கத்துக்கு 700 பில்லியன்(70,000 கோடி) ரூபா வரை லாபம் கிடைத்துள்ளதாக என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திபாென்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்,

மத்திய கிழக்கு யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ரவுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம் எந்த முகாமைத்துவமும் இல்லாமையே நெருக்கடிக்கு காரணமாகும். அதனால் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறினால் நீண்டகாலம் செல்ல முன்னர் மக்கள் வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாது.

மத்திய கிழக்கு யுத்தம் கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் 26ஆம் திகதி அமெரிக்கா யுத்தத்துக்கான தயார் படுத்தல்களை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்த காலப்பகுதியிலேயே இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்து, எமது தேவையான எரிபொருட்களை பெற்றுக்கொள்வதற்கானநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும். யுத்தம் ஒன்று ஏற்பட்டால் அதற்கு எமது நாடு முகம்கொடுக்க முடியுமான தயார் படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்திருந்தார்.

ஆனால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு சில தினங்களில், அதாவது 3ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு வந்த ஜனாதிபதி, எமக்கு தேவையான எரிபொருள் 40 நாட்களுக்கு போதுமான அளவு இருப்பதாக தெரிவி்தார். அதேநேரம் எமக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்வரை இப்பதாக வெளிவிவகார அமைச்சர் லிஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார்.அவ்வாறு இருக்கையில் எரிபொருள் சூத்திரத்திற்க்கு மாற்றமாக அரசாங்கம் இந்த மாதம் இரண்டு தடவைகள் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தால் முகாமைத்துவம் செய்ய முடியாமலே இவ்வாறு விலை அதிகரிப்பு மேற்கொண்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது துறைமுகத்தில் எரிபொருள் இறக்குமதி செய்யும்போதேல்லாம் நாட்டில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் நிலையே இருக்கிறது.

அத்துடன் இந்த காலப்பகுதியில் ஒரு எரிபொருள் கப்பலைக்கூட அரசாங்கத்துக்கு கொண்டுவர முடியாமல்போயிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் கொண்டுவரும் எரிபொருளே நாட்டில் இருக்கிறது. அரசாங்கத்துக்கு முடியாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அரசாங்கத்துக்கு அனுபவமில்லை. இராஜதந்திர தொடர்புகள் இல்லை. நெருக்கடி நிலைமை ஒன்று ஏற்படும்போது, உலக நாடுகளுடன் கலந்துரையாடி அதனை சமாலிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே நாட்டு தலைலரின் பொறுப்பு. ஆனால் அதனை செய்ய ஜனாதிபதி தவறியுள்ளார்.

அதேநேரம் இவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, நாட்டில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்னார்கள். தீர்வுக்கான வழிகளையும் தெரிவித்தார்கள். அதனாலே மக்கள் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்கினார்கள். ஆனால் இன்று எதனையும் காணக்கூடியதாக இல்லை. வெறும் வாய்ப்பேச்சு மாத்திரமே இருக்கிறது. துறைமுகத்தில் இறக்கும் விலைக்கு எரிபொருட்களை விற்பனை செய்யலாம் என்றே தெரிவித்தார்கள். ஆனால் அரசாங்கம் கையிருப்பில் வைத்திருந்த எரிபொருட்களுக்கே விலை அதிகரித்தது. அதனால் அரசாங்கத்துக்கு 700 பில்லியன் ரூபாவரை லாபம் கிடைத்துள்ளது.

திறைசேரி நிரம்பி வழிவதாக போதுமானளவு டொலர் இருப்பதாகவும் அரசாங்கம் தெரிவிக்கிறது. அப்படியானால், இந்த விலை அதிகரிப்புகளால் மக்கள் அன்றாட வாழ்க்கைச் செலவுகளுக்காக கஷ்டப்படும் நிலையில், மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாமல் இருக்கிறது.? திறைசேரி எவ்வாறு நிரம்பியது என்பதை இவர்கள் தெரிவிப்பதில்லை. 2023இல் ரணிவ் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்து மக்கள் மீது விதித்த வரிகளே இதற்கு காரணமாகும். இந்த வரிகளை இல்லாமலாக்குவதாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது தெரிவித்திருந்தார். ஆனால் அந்த வரியையும் நீக்கவில்லை. மக்களிடமிருந்து பெறப்படும் வரி பணமே திறைசேரி நிரம்ப காரணமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, அதற்கு தீர்வுகாண நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் அந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை. அதனாலே மக்கள் மக்கள் வீதிக்கிறங்கினார்கள். எனவே மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நடைமுறை வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லை. அதனால் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் மக்கள் வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாமல்போகும் நிலை ஏற்படுமெனவும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *